கத்தரியில் பூச்சி துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி தோட்டக் கலைத்துறை விளக்கம்
தேனி: ‘கத்தரி பயிரில் குறுத்து, காய்களைத் தாக்கும் துளைப்பான் பூச்சியை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்.’ என, தோட்டக்கலைத் துணை இயக்குனர் நிர்மலா ஆலோசனை வழங்கி உள்ளார்
அவர் கூறியதாவது: ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு, சின்னமனுார் என அனைத்து வட்டாரங்களிலும் சேர்த்து 265 எக்டேர் பரப்பில் கத்தரி சாகுபடியாகிறது.
கத்தரியில் காய், குருத்து துளைப்பான் பாதித்த செடிகளில் குருத்துப்பகுதி வாடிய நிலையில் காணப்படும். காய்கள், தண்டுப் பகுதியில் திசுக்களை கழிவுகளாக ஆங்காங்கே செடிகளில் காணப்படும்.
இலைகள் வாடி, மொட்டு, சிறுகாய்கள் உதிரும். இந்தப் பூச்சியை கட்டுப்படுத்த பாதித்த செடிகளின் நுனித்தண்டு பகுதியை சேகரித்து அழித்து விட வேண்டும். ஒரே இடத்தில் தொடர்ச்சியாக கத்தரி பயிரிட கூடாது. எக்டேருக்கு 12 வீதம் இனக்கவர்ச்சி பொறிகளை வைக்க வேண்டும்.
எக்டேருக்கு 25 கிலோ வேப்பம் விதைச்சாற்றினை 10லி., தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். அல்லது 10 லிட்டர் தண்ணீரில் 30 மி.லி., அசாடிராக்டின், இமாமெக்டின் பென்சோயட் மருந்து 4 கிராம், புழுபென்டிமைடு 7.5 கிராம் என ஏதாவது ஒரு மருந்தை தெளித்து பயன் பெறலாம்., என்றார்.