பயிர் காப்பீடு மக்காச் சோளத்திற்கு செய்ய அறிவுறுத்தல்
தேனி: மக்காச் சோளம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் டிச.30க்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேளாண் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
மாவட்டத்தில் தற்போது 5,790 எக்டேர் பரப்பளவில் மக்காச்சோள சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மக்காச்சோளத்தில் நல்ல வருவாய் உள்ளதால் இந்தாண்டு சாகுபடி பரப்பு கூடி உள்ளது. பயிர்கள் இயற்கை பேரிடர்கள், வனவிலங்கு தாக்குதலில் சேதமடைந்தால், அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
வேளாண் துறையினர் கூறுகையில், ‘மக்காச்சோள விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.435 பிரிமியம் தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்ய வேண்டும். மாவட்டத்தில் இதுவரை 150.53 ஏக்கருக்கு விவசாயிகள் பயிர்காப்பீடு செய்துள்ளனர். மக்காச்சோளத்திற்கு பயிர் காப்பீடு செய்ய கடைசிநாள் டிச.30 ஆகும்’, என்றனர்.