தி.மு.க. , எம்.பி. , – எம். எல் .ஏ., உள்கட்சி பூசலால் சுகாதார நிலைய பூமி பூஜை ரத்து
கம்பம் : தி.மு.க., எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன், எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன் இடையே நிலவும் உட்கட்சி பூசலால் க.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை திடீரென ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை பூமி பூஜை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு கட்சியினரிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: தேனி மாவட்ட தி.மு.க.,வில் வடக்கு மாவட்ட செயலாளராக எம்.பி., தங்க தமிழ்ச் செல்வனும், தெற்கு மாவட்ட செயலாளராக எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணனும் கம்பம் பகுதியினர். இருவரும் இரு அணிகளாக செயல்படுகின்றனர். ஒருவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் மற்றொருவர் கலந்து கொள்வதில்லை. சில மாதங்களாக இருவரும் நிகழ்ச்சிகளை புறக்கணித்து வருகின்றனர்.
இந்நிலையில் எம்.பி.,யை அழைக்காமல் அவரது பெயர் சில பேனர்களிலும் இடம் பெறாததை சுட்டிக்காட்டி அவரது தரப்பில் கட்சி மேலிடத்திலும், சுகாதாரத்துறை அமைச்சரிடம் புகார் செய்யப்பட்டது. அதையடுத்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது என்றனர்.