பெரியாறு அணையில் நீர் திறப்பு குறைப்பு; வைகை அணையில் நீர் நிறுத்தம்
கூடலுார் : முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப்பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு 556 கன அடியாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் வைகை அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கு கால்வாய் வழியாக திறக்கப்பட்ட நீர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின்றி நீர்மட்டம் குறைந்து வருகிறது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி நீர்மட்டம் 121.50 அடியாக இருந்தது(மொத்த உயரம் 152 அடி).
அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 345 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு 2925 மில்லியன் கன அடி. நீர்மட்டம் குறைந்து வருவதால் தமிழகப்பகுதிக்கு இரண்டாம் போக நெல் சாகுபடி மற்றும் குடிநீருக்காக திறக்கப்பட்ட 667 கன அடி நீர் நேற்று காலையிலிருந்து வினாடிக்கு 556 கன அடியாக குறைக்கப்பட்டது. அணை நீர்ப் பிடிப்பில் கடுமையான வெப்பம் நிலவுவதால் நீர்மட்டம் மேலும் குறையும் வாய்ப்புள்ளது. இதனால் லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் 60 மெகா வாட்டாக இருந்த மின் உற்பத்தி 50 ஆக குறைந்தது.
ஆண்டிபட்டி
வைகை அணைக்கு முல்லைப்பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறுகள் மூலம் நீர்வரும். மதுரை, திண்டுக்கல் மாவட்ட 2 ம் போக பாசனத்திற்கு கால்வாய் வழியாக டிச., 18 முதல் இந்த அணையில் இருந்து நீர் செல்கிறது. முறைப்பாசனம் நடைமுறையில் இருப்பதால் அணையில் இருந்து சில நாட்கள் நீர் திறக்கப்பட்டும், சில நாட்கள் நிறுத்தப்பட்டும் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 650 கன அடி வீதம் பாசனத்திற்காக வெளியேற்றப்பட்ட நீர் நேற்று
காலை 6:00 மணிக்கு நிறுத்தப்பட்டது.
மதுரை தேனி ஆண்டிபட்டி சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று அணை நீர்மட்டம் 65.03 அடியாக இருந்தது(அணை உயரம் 71 அடி). அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 419 கன அடி.