அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கான ஊதிய பட்டியல் தயாரிப்பு தாமதம் விரைந்து முடிக்க ஆசிரியர்கள் கோரிக்கை
தேனி: அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதிய பட்டியல் இதுவரை தயாராகாததால் ஊதியம் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பணியை விரைவாக முடித்து ஊதியம் வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட ஆலோசகத்தலைவர் பாண்டித்துரை கூறியதாவது: மாவட்டத்தில் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் 39 உள்ளது. இதில் ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள், அலுவலர்கள் பணிபுரிகின்றனர்.
இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 18 முதல் 20 தேதிக்குள் ஊதிய பட்டியல் ‘IFHRMS’ முலம் தயாரிக்கப்படும். ஆனால், இந்த மாதத்திற்கான ஊதியபட்டியல் இதுவரை தயாரிக்கப்படவில்லை.
இதனால் மாதந்தோறும் வழங்கும் தேதியில் ஊதியம் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
ஆசிரியர்கள், அலுவலர்கள் வீட்டு வாடகை, இ.எம்.ஐ., மருத்து செலவு என பல செலவீனங்கள் உள்ளது.
ஊதியபட்டியல் தயாரிப்பு தாமதம் பலரை பாதிக்கும். உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிபவர்களுக்கு இம்மாதத்திற்கான ஊதியம் உரிய காலத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.