ஏலக்காய் விலை சரிவு: விவசாயிகள் கவலை
கம்பம்; ஏலக்காய் விலை குறைந்து வரும் நிலையில் ஏலத்தோட்டங்களில் விளைச்சலும் இல்லை என ஏல விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இடுக்கி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடியாகிறது . இந்தியாவின் மொத்த உற்பத்தியில் கேரளா 80 சதவீதத்தை பகிர்ந்து கொள்கிறது. சர்வதேச அளவில் இந்திய ஏலக்காய்க்கு கிராக்கி உண்டு. மணம், குணம், தரம் போன்றவற்றில் பிற நாட்டு ஏலக்காய்களை விட இந்திய ஏலக்காய் சிறந்தது.
ஆனால் குவாதிமாலா நாட்டில் மானாவாரியாக ஏலக்காய் விளைவதால் சர்வதேச மார்க்கெட்டில் விலை குறைவாக விற்பனை செய்கின்றனர். இந்தாண்டு குவாதிமாலாவிலும் மகசூல் குறைந்துள்ளது. இந்தியாவில் 40 சதவீத மகசூல் பாதிப்பு ஏற்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, இந்திய ஏலக்காய்க்கு விலை கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. அதை பூர்த்தி செய்வது போல கடந்த சில மாதங்களாக ஏலக்காய் விலை படிப்படியாக அதிகரித்து சராசரி விலை கிலோவிற்கு ரூ.3100 வரை சென்றது. ஆனால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கொஞ்சம் கொஞ்சமாக விலை குறைய துவங்கி தற்போது சராசரி விலை கிலோ ரூ. 2900 க்கு வந்துள்ளது.
தோட்டங்களில் காயும் இல்லை. விலையும் குறைவது எப்படி என தெரியாமல் ஏல விவசாயிகள் கவலையில் உள்ளனர். தொடர்ந்து விலை குறைந்து வருவதால் என்ன செய்வது எனத் தெரியாமல் ஏல விவசாயிகள் புலம்ப துவங்கியுள்ளனர்.