Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

கோடை காலம் துவங்கும் முன் வெள்ளரி, தர்பூசணி வரத்து

பெரியகுளம் : தேனி மாவட்டத்தில் கோடை காலம் துவங்கும் முன்பே வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் வெயிலை சமாளிக்க வெள்ளரிக்காய், தர்பூசணி விற்பனைக்கு வந்துள்ளன.

மாவட்டத்தில் இரவில் தொடரும் பனி காலை 8:00 மணி நீடிக்கிறது. காலை 9:00 மணி முதல் மாலை 4:00 வரை வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இதனால் வெயில் தாக்கத்தை சமாளிக்க பகலில் பழவகைகள், ஜுஸ் விற்பனை துவங்கியுள்ளது. பெரியகுளத்தில் இரு நாட்களாக வெள்ளரிக்காய் விற்பனைக்கு வந்துள்ளது. கிலோ வெள்ளரிக்காய் ரூ.100 க்கு விற்பனையாகிறது.

வெள்ளரிக்காயில் நீர் சத்து அதிகமுள்ளது. உடல் சூட்டை குறைக்கும். இதில் வைட்டமின் பி. சி. கே. மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது. கொழும்பு செல்களை கரைத்து உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது. இதில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.

இதனால் பலரும் விரும்பி வாங்கி செல்கின்றனர். தேனி, ஆண்டிபட்டி பகுதியில் தர்பூசணி விற்பனைக்கு குவித்துள்ளனர். உடலுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி கிலோ ரூ. 25க்கு விற்பனை செய்யப் படுகிறது.

வெள்ளரிக்காய் வியாபாரி பாண்டியன் கூறுகையில்: கெங்குவார்பட்டி மத்துவார் கண்மாய் ஓரங்களிலும், அதனை ஒட்டிய நிலங்களில் வெள்ளரி சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுவடைக்கு வந்துள்ளது. கிலோ ரூ.80 க்கு வாங்கி ரூ.100 க்கு விற்கிறோம். மார்ச்சில் வரத்து அதிகரிக்கும் போது வெள்ளரிக்காய் விலை குறையும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *