வைகை அணை பூங்காவில் தனியார் மூலம் ராட்டினம் இயக்க ஏற்பாடு
ஆண்டிபட்டி: வைகை அணை பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவர்வதற்கு தனியார் மூலம் ராட்டினம் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா இடமாக வைகை அணை மற்றும் பூங்கா உள்ளது. கேரளா கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் வைகை அணை பூங்கா பார்த்து செல்ல தவறுவதில்லை. கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பில்லாத வைகை அணை பூங்கா சுற்றுலா வரும் பயணிகள், குழந்தைகளுக்கும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. விடுமுறை நாட்களில் இயக்கப்படும் மாதிரி ரயில், வைகை அணை பூங்காவில் முக்கிய இடம் பிடித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட படகு குழாம், இசை நடன நீரூற்று ஆகியவை தற்போது செயல்பாட்டில் இல்லை. சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் வைகை அணை இடது கரை சிறுவர் பூங்காவில் தனியார் மூலம் சிறுவர்களுக்கான சூழலும் ராட்டினம், குதித்து விளையாடுவதற்கான பலூன் அமைக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது வலது கரை பயில்வான் பூங்காவில் ‘கொலம்பஸ் அசுரத்தாலாட்டு’ என்று பெயரிடப்பட்ட ராட்டினம், சிறுவர்களுக்கான ஜம்பிங் பலூன், சுழலும் ஐஸ் கப் ராட்டினம் அமைக்கப்பட்டுள்ளது. தனியார் மூலம் இயக்கப்படும் ராட்டினம் உள்ளிட்டவைகளுக்கு கட்டண விபரத்திற்கான போர்டு இல்லை. வசூலிக்கப்படும் பணத்திற்கு ரசீதும் வழங்குவதில்லை என்று சுற்றுலா பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
வைகை அணை நீர்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பூங்காவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ராட்டினம் உள்ளிட்ட உபகரணங்களுக்கு தனியார் மூலம் கட்டணம் ரூ.30 முதல் 50 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் வைகை அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு புதிதாக அமைக்கப்பட்ட ராட்டினம் மற்றும் குழந்தைகளுக்கான ஜம்பிங் பலூன் குதூகலம் ஏற்படுத்துவதாக உள்ளது. கட்டண விவரங்களுக்கான போர்டு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.