சர்க்கரை நோயாளிகளின் பாத பராமரிப்பு சிகிச்சையில் சுணக்கம்: அரசு மருத்துவமனை,சுகாதார நிலையங்களில் ஆர்வமில்லை
கம்பம்: சர்க்கரை நோயாளிகளின் பாத பராமரிப்பில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சையில் சுணக்கம் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
சர்க்கரை நோய் உலகம் முழுவதும் தீர்க்க முடியாத பிரச்னையாக உள்ளது. நாள்பட்ட சர்க்கரை நோய் பாதித்த நபர்களுக்கு கண், சிறுநீரகம் மற்றும் நரம்பு பாதிப்புக்கள் ஏற்படுகிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் ஆண்டிற்கு ஒரு முறை , இம் மூன்று உறுப்புக்களையும் அதன் செயல்பாடுகளையும் பரிசோதித்து அவர்களுக்கு தேவையான சிகிச்சை மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வருகிறது.
பெரும்பாலான சர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண் ஏற்படுவது, கால்களில் மதமதப்பு, உணர்ச்சியற்று போவது உள்ளிட்ட பிரச்னைகள் அதிகம் ஏற்படும். குறிப்பாக கால்கள், பாதங்களில் அடிப்பாகங்களில் புண்கள் ஏற்பட்டு குணப்படுத்த முடியாமல் விரல்களை அகற்றுவது, கால், விரல்கள் அகற்றுவது போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது .
எனவே பாத பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த பொதுச் சுகாதாரத்துறை கடந்தாண்டு டாக்டர்களை அறிவுறுத்தியது.
இதனை தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் உள்ள தொற்றா நோய் (Non Communicable disease) பிரிவில் இதற்கென கண்ணாடி ஒன்று வைக்கப்பட்டுள்ளது .
நோயாளிகள் அந்த கண்ணாடியில், தங்களின் பாதங்களை பார்த்து அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வார்கள். அறிகுறிகள் இருந்தால் டாக்டர்கள் சிகிச்சையளிப்பார்கள். ஆரம்பத்தில் நன்றாக பரிசோதித்து சிகிச்சையளித்த நிலையில் தற்போது இச் சிகிச்சையில் சுணக்கம் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
அனைத்து டாக்டர்களும், சிகிச்சைக்கு வரும் நாள்பட்ட சர்க்கரை நோயாளிகளின் பாதப் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வரும் சர்க்கரை நோயாளிகளின் பாத பராமரிப்பில் கவனம் செலுத்துவதோடு அல்லாமல் , அவர்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்த டாக்டர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.