சினிமா படக் குழுவினரின் வேனை சேதப்படுத்திய படையப்பா
மூணாறு: மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் 8ம் மைல் பகுதியில் சினிமா படபிடிப்பு குழுவினரின் வேனை படையப்பா சேதப்படுத்தியது.
மூணாறு பகுதியில் வலம் வரும் பிரபல படையப்பா ஆண் காட்டு யானை இரண்டு வாரங்களாக மதம் பிடித்ததற்கான அறிகுறியுடன் சுற்றித் திரிகின்றது. அது போன்ற சூழலில் படையப்பா ஆக்ரோஷமாக மாறிவிடும். கடந்தாண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மதம் பிடித்த படையப்பா 30க்கும் மேற்பட்ட வாகனங்கள், 10க்கும் மேற்பட்ட கடைகள் ஆகியவற்றை சேதப்படுத்தின.
இந்நிலையில் மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் 8ம் மைல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு படையப்பா நடமாடியது. அப்போது அந்த வழியில் மூணாறை நோக்கி வந்த மலையாள மொழி சினிமா படக்குழுவினர் பயணித்த வேனை படையப்பா வழி மறித்து தாக்கியது. அச்சத்தில் வேனில் இருந்தவர்கள் பலமாக கூச்சலிட்டதால் படையப்பா பின்வாங்கி சென்றது. அதனால் அனைவரும் தப்பினர். வேனின் முன்பகுதி சேதமடைந்தது