மா விளைச்சலை அதிகரிக்க பண்ணை பள்ளி பயிற்சி
பெரியகுளம்: தட்பவெப்ப நிலைக்கு தகுந்தாற்போல் மா மரங்களில் தோன்றும் காவடிப்புழுக்களை ஒழிக்க பண்ணை பள்ளி பயிற்சியில் விவசாயிகளுக்கு களப்பயிற்சி அளிக்கப்பட்டது.
பெரியகுளம் வட்டார விவசாயிகள் ஒருங்கிணைந்து சோத்துப்பாறை அருகே விவசாயி ராஜா தோட்டத்தில் அட்மா திட்டத்தின் கீழ் பண்ணை பள்ளி பயிற்சி 25 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
தோட்டக்கலை உதவி இயக்குனர் நந்தினி தலைமை வகித்து பேசுகையில்,’மா மரங்களில் சாகுபடி முறைகள், மா விளைச்சல் திறன் அதிகப்படுத்துவது உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் வாரம் ஒருமுறை என 6 வாரங்கள் பயிற்சி அளிக்கப்பட்ட உள்ளது’, என்றார்.
தோட்டக்கலை கல்லூரி பூச்சியல் துறை பேராசிரியர் முத்தையா பேசுகையில்: மா மரங்களில் தட்பவெப்பநிலைக்கு தகுந்தாற் போல் பூச்சிகள் தோன்றுகிறது.
இலைப்பேன், அசுவினி, மாவுப்பூச்சி, காவடி புழு அதிக அளவில் தோன்றும் போது, அதனை கட்டுப்படுத்த வீரியம் அதிகமுள்ள மருந்துகளை முதலில் தெளிக்க வேண்டும்.
படிப்படியாக மருந்து அளவை அதிகரித்து தெளிக்க வேண்டும். ஒரு முறை தெளித்த மருந்தினை மறுமுறை அதே மருந்தினை தெளிக்காமல் வேறு மருந்தை தெளித்து கட்டுப்படுத்தலாம்.
ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை முறைகளை கள பயிற்சி மூலம் எடுத்துரைத்தார். ஏற்பாடுகளை தோட்டக்கலை அலுவலர் சரவணன், உதவி தோட்டக்கலை அலுவலர் சங்கவி செய்திருந்தனர்.-