வெள்ளை விநாயகர் கோயிலை ஆதிகாமாட்சி அம்மனாக மாற்றி வசூல் மோசடி செய்த நால்வர் மீது வழக்கு
தேனி: தேவதானப்பட்டியில் பழமையான வெள்ளை விநாயகர் கோயிலை ஆதிகாமாட்சியம்மன் கோயில் என பெயர் மாற்றி வசூல் வேட்டை நடத்திய நால்வர் மீது செயல் அலுவலர் வேலுச்சாமி புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
தேவதானப்பட்டியில் புகழ்பெற்ற மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் ஹிந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோயில் செயல் அலுவலராக வேலுச்சாமி உள்ளார். இவர் தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் காமாட்சிஅம்மன் கோயில் கிழக்கு பகுதியில் வெள்ளை விநாயகர் கோயில் உள்ளது.
இந்த கோயில் அறநிலைத்துறை பட்டியலில் காமாட்சியம்மன் கோயில் கட்டுப்பாட்டில் உள்ளது. கட்டுமானங்கள் சிதைந்த நிலையில் இருந்த இந்த கோயிலை, தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன், குழந்தைவேல், மொட்டைபழனியப்பன், பொன்ராஜ் உள்ளிட்டோர் இணைந்து அனுமதியின்றி புதிய கட்டமைப்புகளை உருவாக்கினர். மேலும் கோயிலில் விநாயகர் சிலை இருக்க வேண்டிய இடத்தில் புதிதாக அம்மன் சிலைகளை நிறுவினர். வெளியூர் பக்தர்கள் குழம்பும் வகையில் ‘ஆதிகாமாட்சி’ கோயில் என விளம்பரம், பூஜைகள் செய்து மோசடியாக காணிக்கை வசூலித்துள்ளனர்.
புராதான கோயிலை அனுமதியின்றி மாற்றி, வெள்ளை விநாயகர் கோயிலை ஆதிகாமாட்சியம்மன் கோயிலாக மாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரினார்.இப் புகார், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் நால்வர் மீது மோசடி வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்