‘மைக்ரோ பைனான்ஸ் ‘ நிதி நிறுவனங்களில் சிக்கித் தவிக்கும் பெண் தொழிலாளர்கள்
மூணாறு: மூணாறில் தனியார் ‘மைக்ரோ பைனான்ஸ்’ நிதி நிறுவனங்களிடம் சிக்கி தொழிலாளர்கள் மீள இயலாமல் தவித்து வருகின்றனர்.
கேரளாவில் பாதி விலையில் பொருட்கள் வழங்குவதாக கூறி நடந்த மோசடியில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் பணத்தை இழந்த நிலையில், மூணாறு பகுதியில் உள்ள தொழிலாளர்கள் தனியார் ‘ மைக்ரோ பைனான்ஸ்’ நிதி நிறுவனங்களில் சிக்கி மீள இயலாமல் தவித்து வருகின்றனர்.
மூணாறு பகுதியில் வசிக்கும் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஊதியம் ரூ.480 வரை வழங்கப்படுகிறது.
பிள்ளைகளின் கல்வி, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு உள்பட பல்வேறு செலவுகளை சமாளிக்க இயலாத நிலை உள்ளது. அதனால் தொழிற்சங்கங்களைச் சார்ந்த கூட்டுறவு சங்கங்களில் கடன் உள்பட பல்வேறு கடன்களை பெற்று வருகின்றனர்.
இதனிடையே தொழிலாளர்களின் நிலைமையை அறிந்து களம் இறங்கிய பல்வேறு தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்கள் பெண் தொழிலாளர்களை குறி வைத்து கடன் வழங்க துவங்கினர்.
அதில் சிக்கிய தொழிலாளர்கள், அதிக வட்டி விகிதம் உள்பட பல்வேறு காரணங்களால் நிதி நிறுவனங்களை விட்டு மீள இயலாமல் சிக்கி தவித்து வருகின்றனர்.
இது போன்ற சூழலில் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்களின் நடவடிக்கைகளை போலீசார் உள்பட அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.