போக்குவரத்து விதிமீறி சிறுவர்கள் டூவீலர் ஓட்டுவது அதிகரிப்பு; விபத்துக்களை தடுக்க போலீஸ் சோதனை தேவை
தேவதானப்பட்டி: போக்குவரத்து விதிகளை மீறி லைசென்ஸ் இன்றி சிறுவர்கள் டூவீலர்களை ஓட்டி செல்வது அதிகரிப்பதால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. போலீஸ் வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும்.
பெரியகுளம் போலீஸ் சப்- டிவிஷனுக்கு உட்பட்ட தேவதானப்பட்டி பைபாஸ் ரோடு, செங்குளத்துப்பட்டி முனீஸ்வரன் கோயில் ரோடு, காட்ரோடு, கெங்குவார்பட்டி கம்பெனி பிரிவு ரோடு, பெரியகுளம் வடுகபட்டி அட்டை கம்பெனிரோடு, கைலாசபட்டி ஆர்ச் ரோடு, லட்சுமிபுரம் மீனாட்சிபுரம் பைபாஸ் ரோடு, கும்பக்கரை ரோடு, சோத்துப்பாறை ரோடு ஆகிய பகுதிகள் விபத்து பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த விபத்து பகுதிகளை அறியாமல் சில மாதங்களாக போக்குவரத்து விதிகளை மீறி 17 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் டூவீலர்கள் ஓட்டி சென்று, 30க்கும் அதிகமான விபத்துக்கள் ஏற்படுத்தி உள்ளனர். இவர்களில் யாரும் ஹெல்மெட் அணியவில்லை. சிறுவர்கள் டூவீலர் ஓட்டுவதை பெற்றோர் சிலர் ஆதரிப்பதாலும் இது போன்ற விதிமீறல் விபத்து அதிகரிக்கிறது. சிறுவர்கள் டூவீலரில் செல்வது அதிகரித்து வருகிறது. ஒரு டூவீலரில் நண்பர்களை ஏற்றிக்கொண்டு மூன்று பேர் வரை செல்கின்றனர். போக்குவரத்து விதிகளை அறியாத சிறுவர்கள் ரோட்டில் வேகமாக செல்வதும், நினைத்த இடத்தில் திருப்புவது என விதிமீறி ஆபத்தில் சிக்குவதோடு எதிரே வரும் அப்பாவிகளும் விபத்துக்குள்ளாகின்றனர். சில சிறுவர்களுக்கு வாகனங்களில் கால் ஊன்றி நிறுத்தும் அளவிற்கு கூட கால்கள் எட்டுவதில்லை. மாவட்டம் முழுவதும் பல ஊர்களில் சிறுவர்கள் டூவீலர்கள் ஓட்டிச்செல்வதை போலீசார்
கண்டுகொள்வதில்லை. இரு மாதம் முன்பு தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகே
டூவீலரில் நான்கு பக்கம் சுழலும் ‘வீலிங்’ செய்த சிறுவனுக்கு டூவீலர் கொடுத்து அனுப்பிய அவரது மாமா கைது செய்யப்பட்டார்.
இந்த நடவடிக்கையை சமூக ஆர்வலர்கள் வரவேற்றனர். அதன்பின் ஏனோ சிறுவர்கள் வானம் ஓட்டுவதை கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
பெரியகுளம் டி.எஸ்.பி., நல்லு: சிறுவர்கள் டூவீலர் ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, டூவீலர் பறிமுதல் செய்யப்படும். சப்-டிவிஷனில் 4 போலீஸ் ஸ்டேஷன்கள் மற்றும் டிராபிக் போலீசாருக்கும் ஆய்வு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது என்றார்.
பெற்றோர் மீது நடவடிக்கை தேவை
ஜெயராமன், சமூக ஆர்வலர் : போலீசார் முறையாக கண்காணித்து சிறுவர்கள் டூவீலர் ஓட்டுவதை தடுக்க வேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளை சைக்கிளில் பள்ளிக்கு செல்ல அறிவுறுத்த வேண்டும். இது சமுதாயத்திற்கும் சிறுவர்கள் உடலுக்கும் நல்லது. டூவீலர் ஓட்டும் சிறுவர்களின் பெற்றோரை வரவழைத்து அவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிக்கடி வாகன சோதனை தீவிரப்படுத்த வேண்டும்.–