அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்க துாய்மை பணியாளர்கள் மனு பயன்பாட்டிற்கு வராத ஜல்ஜீவன் திட்டம்
தேனி: கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு மனுக்கள் வழங்க பொதுமக்கள் அதிகம் வருகை தந்தனர். ஜல்ஜீவன் திட்ட பணி முடிந்து 3 ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராததால் மக்கள் மனு அளித்தனர்.
தேனி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., மகாலட்சுமி முன்னிலை வகித்தனர். பொதுமக்கள் வழங்கிய முக்கிய மனுக்கள் விபரம்:
ஊராட்சி துாய்மைப் பணியாளர்கள் சார்பில் துாய்மை தொழிலாளர்கள் நலச்சங்க மாநில தலைவர் சக்திவேல் மனுவில், ‘ஊராட்சிகளில் பணிபுரியும், துாய்மைப்பணியாளர்கள், துாய்மை காவலர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்க வேண்டும்.
மருத்துவகாப்பீடு, ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் உள்ளிட்டவை வழங்க’, கோரினர்.
கூடலுார் மனோஜ், பா.ஜ., நகர நிர்வாகி சந்தனகுமார் வழங்கிய மனுவில், ‘கூடலுார் நகராட்சி சார்பில் பெத்துகுளம் பகுதியில் குப்பை கொட்டப்படுகிறது. சமூக விரோதிகள் குப்பை கிடங்கிற்கு தீ வைப்பதால் அப்பகுதி மக்கள் நோய்பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.
இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேறு பகுதிக்கு குப்பை கிடங்கை மாற்ற வேண்டும்’, என கோரினர்.
அல்லிநகரம் காந்திநகர் மாரிச்சாமி பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட சமுதாய பொதுமக்கள் சார்பில் வழங்கிய மனுவில், ‘பெரியகுளம் தாலுகா ஜல்லிபட்டியில் பெத்தனசாமி கோயில் உள்ளது.
இக்கோயில் திருவிழாவை பல்வேறு கிராமத்தில் உள்ளவர் கொண்டாடுகிறோம். இந்தாண்டிற்கான திருவிழா ஏற்பாடுகள் நடந்து வந்த போது சிலர் ரகளையில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருவிழாவிற்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.’ என்றனர்.
பயன்பாட்டிற்கு வராத ‘ஜல்ஜீவன்’
குள்ளப்புரம் ஊராட்சி சங்கரமூர்த்திபட்டி பொதுமக்கள் சார்பாக பாண்டீஸ்வரன் மனுவில், கிராமத்தில் ‘ஜல்ஜீவன்’ திட்டத்தில் ரூ.26 லட்சம் செலவில் மேல்நிலை தொட்டி, வீடுகளுக்கு குழாய் இணைப்பு வழங்கினார்.
இப்பணிகள் முடிந்து 3 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்குவரவில்லை. இதனால் தண்ணீர் பிரச்னை அதிகரித்துள்ளது.
இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
பஞ்சமி நிலங்களை மீட்க காத்திருப்பு போராட்டம் என போஸ்டர் ஒட்டி இருந்ததால், கலெக்டர் அலுவலக வளாகம், நுழைவுவாயில் பகுதிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், தேனி தாசில்தார் சதீஸ்குமார் நுழைவுவாயில் பகுதிக்கு வந்து சூழ்நிலை பற்றி போலீசாரிடம் பேசி சென்றனர்.