மூணாறு சுற்றுலா பஸ் விபத்தில் டிரைவர் கைது
மூணாறு, பிப். 21: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இருந்து மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர் அடங்கிய 42 பேர் கொண்ட குழு கடந்த 18ம் தேதி கேரள மாநிலம், மூணாறுக்கு சுற்றுலா வந்துள்ளனர். இக்குழுவினர் மூணாறில் உள்ள பிரபல சுற்றுலாத்தலங்களை பார்வையிட்டு ரசித்தனர். நேற்று முன் தினம் மூணாறு அருகே உள்ள குண்டளை அணைக்கட்டிற்கு சென்றனர். அப்போது மாட்டுப்பட்டி எக்கோ பாயிண்ட் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராவிதமாக கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆதிகா (19), வேனிகா (19) ஆகிய 2 மாணவிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து சம்பந்தமாக மூணாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஓட்டுநர் அதிவேகத்தில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டியது தெரிய வந்தது. மேலும் விபத்தில் காயமடைந்தவர்களும் விபத்தை நேரில் கண்டவர்களும் பேருந்து அதிக வேகத்தில் சென்றதால் தான் விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில் கன்னியாகுமரியைச் சேர்ந்த ஓட்டுநர் வினேஷ் சுந்தர்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில், உயிரிழந்த ஆதிகா, வேனிகா, சுதன் ஆகியோரின் உடல்கள் அடிமாலி அரசு தாலுகா மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.