தேனியில் கட்டப்படும் தரைப்பாலம் ஒருபகுதி பயன்பாட்டிற்கு அனுமதி
தேனி: தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே தேசிய நெடுஞ்சாலைத்துறையால் அமைக்கப்பட்டுவந்த தரைப்பாலத்தின் ஒரு பகுதி தினமலர் செய்தி எதிரொலியால் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டது.
தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே கம்பம் ரோட்டில் ராஜவாய்க்காலில் தரைப்பாலம் இருந்தது. இதனை சீரமைக்கும் பணி ஜன.,2ல் துவங்கியது. முதற்கட்டமாக பழைய பாலத்தின் ஒரு பகுதி அகற்றப்பட்டு அங்கு பாலம் கட்டுமான பணி துவங்கியது. இந்த பணி துவங்கி 50 நாட்கள் ஆகியும் பணி நிறைவு பெற வில்லை. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். இதனை சுட்டிக்காட்டி நேற்று முன்தினம் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து பணிகள் முடிக்கப்பட்ட பகுதி போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது. மற்றொரு பகுதியில் பணியை முடித்தால் நகராட்சி சார்பில் ராஜவாய்க்கால் துார்வாரும் பணி தீவிரப்படுத்தப்படும். மேலும் போக்குவரத்திற்கு எளிதாக இருக்கும். எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் தரைப்பாலம் அமைக்கும் பணியை விரைவாக முடிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.