பன்னீர் திராட்சை விலையில் திருப்தி நுகர்வு குறைவால் கொள் முதலில் சிக்கல்
கம்பம்: பன்னீர் திராட்சை கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விலை விற்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும் நுகர்வு குறைவால் வியாபாரிகள் கொள்முதலை குறைக்கின்றனர்.
தேசிய அளவில் ஆண்டு முழுவதும் திராட்சை கிடைக்கும் பகுதி என்ற பெருமையை கம்பம் பள்ளத்தாக்கு பெற்றுள்ளது. இங்குள்ள மண் வளம், சீதோஷ்ண நிலை, மழை வளம் போன்ற காரணிகள் திராட்சைக்கு ஏற்ற சூழலாகும். ஆண்டிற்கு 3 அறுவடை செய்கின்றனர். மஹாராஷ்டிராவில் கூட ஆண்டிற்கு ஒரு அறுவடையே நடைபெறுகிறது.
கம்பம் பள்ளத்தாக்கில் 70 சதவீதம் பன்னீர் திராட்சையும், 30 சதவீதம் விதையில்லா திராட்சையும் சாகுபடியாகிறது
ஒவ்வொரு ஆண்டும் நவ.,டிசம்பரில் மஹாராஷ்டிராவில் இருந்து விதையில்லா திராட்சை மார்க்கெட்டிற்கு வரும். டிச., முதல் ஏப்.,வரை வரத்து இருக்கும். அந்த காலகட்டத்தில் கம்பம் பன்னீர் திராட்சைக்கு விலை கிடைக்காது.
இந்தாண்டு விதையில்லா திராட்சை வரத்தும் குறைவாக உள்ளது. பன்னீர் திராட்சையும் வரத்து பெரிய அளவில் இல்லை.
பன்னீர் திராட்சை விலை கிலோ ரூ. 70 முதல் ரூ.80 வரை கிடைத்து வருகிறது. கடந்தாண்டு சீசனில் பன்னீர் திராட்சை ரூ.35 தான் விலை கிடைத்தது. விலை உயர்வு விவசாயிகளை திருப்தி பட வைத்துள்ளது. பொதுமக்கள் விதையில்லா திராட்சையில் ஆர்வம் காட்டுவதால், நுகர்வு குறைந்துள்ளது. எனவே, வியாபாரிகள் கொள்முதலை குறைத்து வருகின்றனர்.