ஆசிரியரிடம் ரூ.7.50 லட்சம் வழிப்பறி: மூன்று பேர் கைது
தேனி,: தேனி அருகே காரில் சென்ற தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியரிடம் ரூ.7.50 லட்சத்தை வழிப்பறி செய்த மூவரை போலீசார் கைது செய்தனர்.
தேனி முத்துத்தேவன்பட்டி ராமகிருஷ்ணன் 49, கம்பம் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிகிறார்.
தேனி வீரபாண்டி பைபாஸ் ரோட்டில் பிப்.,19 தன் காரை மர்ம நபர்கள் வழிமறித்து, ரூ.7.50 லட்சத்தை வழிப்பறி செய்து போடி ரோட்டில் காரில் தப்பிச்சென்றனர் என போலீசாரிடம் புகார் தெரிவித்தார். போலீசார் விசாரித்தனர்.
ராமகிருஷ்ணனிடம் நடத்திய மேல் விசாரணையில் தேனி சுக்குவாடன்பட்டி ஆண்டவர் 48, பழைய தங்க நாணயங்கள் உள்ளதாகவும், அவற்றை குறைந்த விலைக்கு வாங்கித்தருவதாகவும் கூறி, அன்னஞ்சி சுந்தரேசனிடம் 28, காரில் அழைத்துச் சென்று, மர்ம நபர்கள் உதவியுடன் ரூ.7.50 லட்சத்தை வழிப்பறி செய்து தப்பியதாக தெரிவித்தார்.
எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் ஜவஹர், எஸ்.ஐ., அசோக் மற்றும் போலீசார் விசாரித்து ஆண்டவர், சுந்தரேசன், விஜயகுமார் உட்பட ஐவர் மீது வழக்குப்பதிந்து மூவரை கைது செய்தனர். ஆண்டவர் மீது அல்லிநகரம் போலீசில் கொள்ளை, வழிப்பறி, திருட்டு வழக்குகள் உள்ளன.