பெண்ணிடம் ரூ.3 லட்சம் மோசடி போலி எஸ்.ஐ ., கைது
தேவாரம்,:தேனி மாவட்டம், தேவாரம் அருகே லட்சுமிநாயக்கன்பட்டியில் சீருடை அணிந்து எஸ்.ஐ., எனக்கூறி பெண்ணிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்த போலி எஸ்.ஐ., ராஜதுரை 40,யை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் அருகே விருவீடு பரமேஸ்வரி 38. தேனி குப்பிநாயக்கன்பட்டி ராஜதுரை 40. இவரை தனது கணவர் என்றும் எஸ்.ஐ., என்றும் கூறி சீருடையில் தேவாரம் லட்சுமி நாயக்கன்பட்டி உறவினர் சுரேஷ் வீட்டிற்கு பரமேஸ்வரி 2 மாதங்களுக்கு முன்பு அழைத்து வந்தார்.
அங்கு ராஜதுரை சென்னையில் எஸ்.ஐ., ஆக உள்ளதாகவும், தற்போது கண்டமனுார் எஸ்.ஐ., ஆக பணி மாறுதலில் வந்துள்ளார் எனவும் அறிமுகம் செய்தார். சென்னையில் வீட்டை காலி செய்து வர வேண்டும். அதற்கு ரூ. 3 லட்சம் தேவை, வட்டியுடன் 10 நாட்களுக்குள் பணத்தை திருப்பி தருவதாக பரமேஸ்வரி, சுரேஷ் மனைவி வித்யாவிடம் கேட்டார். வித்யா ரூ. 3 லட்சம் கடன் கொடுத்தார். பணத்தை திரும்ப தராமல் பரமேஸ்வரி, ராஜதுரை ஏமாற்றினர். விசாரித்ததில் ராஜதுரை போலி எஸ்.ஐ., என தெரிந்தது. ஏமாற்றி பணம் மோசடி செய்த பரமேஸ்வரி, போலி எஸ்.ஐ., ராஜதுரை மீது நடவடிக்கை எடுக்க கோரி வித்யா போலீசில் புகார் செய்தார். பரமேஸ்வரியை போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில் ராஜதுரை, 20 நாட்களுக்கு முன் கொடைக்கானல் பகுதியில் தன் பெயரை துரைராஜ் என்றும், மதுவிலக்கு பிரிவு எஸ்.ஐ.,ஆக உள்ளேன் என கூறி வசூலில் ஈடுபட்டது தெரிந்து திண்டுக்கல் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளி வந்தது தெரிந்தது. ராஜதுரையை தேவாரம் போலீசார் நேற்று கைது செய்தனர்.