Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

பெரியாறு அணை கண்காணிப்பு பணிக்காக கேரளாவுக்கு புதிய படகு; 11 ஆண்டுகளாக காத்திருக்கும் தமிழக படகு

கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை கண்காணிப்பு பணிக்காக கேரள நீர்ப்பாசனத்துறைக்கு புதிய படகு இயக்கத்தை தேக்கடியில் அமைச்சர் ரோஷி அகஸ்டின் துவக்கி வைத்தார்.

11 ஆண்டுகளாக அனுமதி கிடைக்காமல் தமிழக நீர்வளத் துறையின் தமிழ் அன்னை படகு காத்திருக்கும் நிலையில் கேரள நீர்ப்பாசன துறைக்கு புதிய படகு துவக்கியதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணை தமிழக நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அணை நீரை நம்பி தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கரில் பாசன நிலங்கள் உள்ளன. ஒரு கோடி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

தமிழக நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அணை கண்காணிப்பு பணிக்காக தேக்கடி படகு நிறுத்தப்பகுதியில் இருந்து 14 கி.மீ., தூரமுள்ள அணைக்கு செல்வதற்கு ஜலரத்தினா, கண்ணகி ஆகிய படகுகள் உள்ளன. இப்படகுகள் 40 ஆண்டு பழமையானதால் புதிய படகு வாங்க முடிவு செய்து 11 ஆண்டுகளுக்கு முன் ரூ.ஒருகோடியில் இரு படகுகள் வாங்கப்பட்டன. அதில் ஒரு படகு தேக்கடி ஏரிக்கு கொண்டு வரப்பட்டது.

அதற்கு தமிழ் அன்னை என பெயரிடப்பட்டது. ஆனால் இப்படகை கூடுதல் குதிரை திறன் (எச்.பி.,) கொண்டதாக உள்ளது எனக்கூறி இயக்க கேரள வனத்துறை அனுமதி தரவில்லை.

தேக்கடி ஏரியில் பெரியாறு புலிகள் காப்பகத்திற்கு 9 படகுகளும், கேரள சுற்றுலாத்துறைக்கு 6 படகுகளும், கேரள காவல்துறைக்கு 2 படகுகளும், கேரள நீர்ப்பாசன துறைக்கு ஒரு படகும் இயக்கப்படுகிறது. இது தவிர விரைவுப்படகும் உள்ளது.

இந்நிலையில் பெரியாறு அணையை கண்காணிக்க நேற்று கேரள நீர்ப் பாசன துறைக்கு புதிய படகை தேக்கடியில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் துவக்கி வைத்தார். தமிழக நீர்வளத்துறைக்கு சொந்தமான படகு 11 ஆண்டுகளாக அனுமதியின்றி தேக்கடி ஏரியில் காத்திருக்கும் நிலையில், கேரள தரப்பில் தொடர்ந்து புதிய படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *