வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெற வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்
தேனி, பிப். 24: பெரியகுளத்தில் எஸ்டிபிஐ கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தெஹலான் பாகவி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசு சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களுக்கான வகுப்பு திருத்த சட்ட மசோதாவை எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நாடாளுமன்றத்தில் கொண்டு வந்துள்ளது. நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்பாகவே ஒன்றிய பாஜ அரசு வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்.
தமிழ்நாட்டில் பாஜ அரசு அமைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இதன்படி தற்போது மும்மொழிக் கொள்கையை பிரச்னை ஆக்கியுள்ளது. மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி ஒதுக்கப்படும் என பாஜ மிரட்டுகிறது. இரு மொழிக் கொள்கை மூலம் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு, கல்வி என அனைத்திலும் இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் முன்னேற்றமாகவே உள்ளது. மும்மொழிக் கொள்கையை எடுத்து வரும் பாரதி ஜனதா அரசனை தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் எதிர்த்து வரும் நிலையில் இதன் போராட்டம் வலுவடைய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.