சரக்கு லாரிகள் நகருக்குள் வந்து செல்ல நேர கட்டுப்பாடு அவசியம்
ஆண்டிபட்டி : ‘ஆண்டிபட்டி நகர் பகுதியில் வர்த்தக நிறுவனங்களுக்கு வந்து செல்லும் சரக்கு லாரிகளுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்க போலீசார் முன் வர வேண்டும்.’ என, பொது மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
கொச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆண்டிபட்டி நகர் பகுதி ஒன்றரை கி.மீ., துாரம் உள்ளது. கொண்டமநாயக்கன்பட்டி செக் போஸ்டில் இருந்து சக்கம்பட்டி வரை மெயின் ரோட்டில் பல வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. ஆண்டிபட்டி கடைவீதி, நாடார் தெரு தினசரி மார்க்கெட், வைகை ரோடு பகுதியிலும் பல கடைகள் செயல்படுகின்றன. கடைகளில் பொருட்களை ஏற்றி இறக்குவதற்காக தினமும் 20க்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் நகர் பகுதிக்கு வந்து செல்கின்றன. மெயின் ரோட்டில் உள்ள கடைகளில் பொருட்களை ஏற்றி இறக்கும் போது சரக்கு லாரிகளை நீண்ட நேரம் நிறுத்தி வைக்கின்றனர். நெருக்கடியான இடங்களில் லாரிகளை திருப்பி போக்குவரத்திற்கு இடையூறு செய்கின்றனர். பள்ளி, கல்லுாரிகள் துவங்கும், முடியும் நேரங்களில் ரோட்டில் நிறுத்தப்படும், திரும்பும் சரக்கு லாரிகளால் பலருக்கும் இடையூறு ஏற்படுகிறது. சரக்கு லாரிகளால் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பு நீண்ட நேரம் நீடிக்கிறது. காலை 10:00 மணிக்கு பின்பும் மாலை 4:00 மணிக்கு முன்பும் சரக்கு லாரிகள் ஆண்டிபட்டி நகர் பகுதியில் பொருட்களை ஏற்றி இறக்குமாறு நேரம் ஒதுக்க போலீசார் முன் வர வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் சரக்கு லாரிகளால் இடையூறு ஏற்பட்டால் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கோரியுள்ளனர்.