மாவூற்று வேலப்பர் கோயில் சித்திரை திருவிழா
மாவூற்று வேலப்பர் கோயில் சித்திரை திருவிழாவில் தேனி, வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். நேற்று முன் தினம் நள்ளிரவு முதலே பக்தர்கள் குவிந்தனர்.
விழாவை முன்னிட்டு வேலப்பருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து வழிபட்டனர். கருப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். நுாற்றுக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து காவடி, பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஆண்டிபட்டியில் இருந்து அரசு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு இருந்தது. பக்தர்கள் வசதிக்காக கோயில் வளாகத்தில் குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டன. பஸ், டூவீலர்கள், நான்கு சக்கர வாகனங்கள் குறிப்பிட்ட துாரத்திற்கு பின் அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் கூட்ட நெரிசலில் 2 கி.மீ., துாரம் நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணியில் போலீசாரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் தெப்பம்பட்டியில் இருந்து 8 கி.மீ., துாரத்திற்கு பல இடங்களில் கூட்ட நெரிசல், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து திரும்பினர். விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயில் செயல் அலுவலர் நதியா, விழாக் குழுவினர் செய்திருந்தனர். ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் பெற்றுச் சென்றனர்.