குல தெய்வ வழிபாட்டில் பெண்களை சாட்டையால் அடித்த வினோத நிகழ்ச்சி
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே கதிர்நரசிங்கபுரத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு குலதெய்வ வழிபாட்டில் பெண்களை கோயில் பூஜாரி சாட்டையால் அடிக்கும் வினோத நிகழ்ச்சி நடந்தது.
இக்கிராமத்தில் உள்ள அன்னை மகாலட்சுமி கோயிலில் அம்மன் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு குலதெய்வமாக அருள் பாலித்து வருகிறார். நேற்று முன் தினம் இரவில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். விரதம் இருந்த பெண் பக்தர்கள் கோயில் முன் அம்மனை வணங்கியபடி வரிசையாக நின்றனர். கோயில் உள்ளிருந்து சாட்டையுடன் ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷமிட்டு சாட்டையுடன் வந்த பூஜாரி zபெண்ணை சாட்டையால் அடித்தார். ஒன்று முதல் நான்கு சாட்டையடிகள் வாங்கிய பெண்கள் பூசாரியின் காலில் விழுந்து வணங்கினர். சாட்டையடி வாங்கிய பெண்கள் முகத்தில் தீர்த்தம் தெளித்து விபூதி பூசினர். இவ்வாறு செய்வதால் மகாலட்சுமியின் அருள் கிடைப்பதுடன் ஏவல், பில்லி, சூனியம் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்பு சரியாகும் என்பதை நம்பிக்கையாக கொண்டுள்ளனர். சாட்டையடி பெற்ற, ‘பெண்களிடம் உள்ள தீய சக்திகள் வெளியேறும்’ எனவும் நம்பப்படுகிறது. குழந்தை வரம் வேண்டியும், திருமண தடை நீங்கவும் பெண்கள் சாட்டையடி பெறுவதை ஆண்டுதோறும் வாடிக்கையாக கொண்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.