முறைகேடான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் கண்டறிய குழு அமைப்பு நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை
தேனி; ‘தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முறைகேடாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகளை கண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளது.’ என, கமிஷனர் ஏகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நகராட்சியின் கமிஷனர் கூறியதாவது: நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பலர் நகராட்சி அனுமதி இன்றி குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு பெற்றுள்ளனர். இதனை கண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை கணக்கில் வராத 175 பாதாள சாக்கடை இணைப்புகள், 318 குடிநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன. இவ்வாறு இணைப்பு பெற்றவர்களிடம் முறையாக வைப்புத்தொகை, வரி, அபராதம் செலுத்த அறிவுறுத்தி உள்ளோம்.
விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
யாரேனும் அனுமதி இன்றி இணைப்பு வைத்திருந்தால், தாங்களாகவே தகவல் தெரிவித்து வைப்புத்தொகை, வரி செலுத்தலாம்.
318 முறையற்ற குடிநீர் இணைப்புகளில் 48 வரன்முறைப்படுத்தப்பட்டு உள்ளது. வரி, வைப்புத் தொகை செலுத்தாத இணைப்புகள் துண்டிக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம்.’, என்றார்.