ஆண்டிபட்டியில் மல்லிகை பூ விளைச்சல் அதிகரிப்பு; விலை குறைவால் விவசாயிகள் வேதனை
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் பல மாதங்களுக்கு பின் மல்லிகை பூக்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது. விலை குறைவால் தேக்கமடையும் பூக்கள் சென்ட் தயாரிப்பு கூடங்களுக்கு குறைந்த விலைக்கு அனுப்பப்படுகிறது.
ஆண்டிப்பட்டி அருகே திம்மரசநாயக்கனூர், பொம்மிநாயக்கன்பட்டி, டி.சுப்புலாபுரம், ராஜகோபாலன்பட்டி, கொத்தப்பட்டி, கன்னியப்பபிள்ளை, கதிர்நரசிங்கபுரம், ராஜதானி, மஞ்சிநாயக்கன்பட்டி உட்பட பல கிராமங்களில் மல்லிகை பூக்கள் சாகுபடி உள்ளது. காற்று, மழை, பனி காலங்களில் மல்லிகை பூக்கள் விளைச்சல் பாதிப்படையும். வெயில் காலங்களில் பூக்கள் விளைச்சல் அதிகம் இருக்கும். சீதோஷ்ண நிலை மாற்றத்திற்கு பின் கடந்த இரு வாரங்களாக ஆண்டிபட்டி பகுதியில் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது.
இதனால் மல்லிகை செடிகளில் பூக்கள் திரட்சியுடன் அதிகளவில் பூத்து வருகிறது. ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டிற்கு வரும் மல்லிகை பூக்களை உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் வாங்கிச் சென்றாலும் வரத்து அதிகரிப்பால் தேக்கமடைகிறது. தேக்கமடையும் பூக்கள் ஏஜென்சி மூலம் சென்ட் தயாரிப்பு கூடங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
விவசாயிகள் கூறியதாவது: ஆண்டிபட்டி பகுதியில் போதுமான அளவு நிலத்தடி நீர் இருப்பால் மல்லிகை செடிகள் செழித்து வளர்ந்துள்ளன.
தற்போது ஒரு ஏக்கரில் தினமும் சராசரியாக 150 கிலோ பூக்கள் எடுக்க முடிகிறது. தற்போது பூக்கள் விலை கிலோ ரூ.250 முதல் 300 வரை உள்ளது. பறிப்பு கூலியாக கிலோவுக்கு ரூ.100 வரை செலவாகிறது.
கமிஷன், போக்குவரத்து, பராமரிப்பு செலவுகளை கணக்கிட்டால் விவசாயிகளுக்கு லாபம் இல்லை. விளைச்சல் குறைந்த காலங்களில் கிடைத்த விலை விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதாக இருந்தது. தற்போது விளைச்சல் இருந்தும் விலை இல்லாததால் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.
வியாபாரிகள் கூறியதாவது: ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டில் வரத்து குறைந்த காலங்களில் மல்லிகை பூக்கள் கிலோ ரூ.4000 வரை விலை இருந்தது.
ஆனால் மார்க்கெட்டில் மொத்தமே 5 முதல் 10 கிலோ அளவே வரத்து இருந்தது. தற்போது தினமும் 3 முதல் 5 டன் வரை வரத்து உள்ளது. வரும் காலங்களில் வரத்து இன்னும் அதிகமாகும். விலை குறைந்தாலும் விளைந்த பூக்களை வீணாக்காமல் சென்ட் தயாரிப்புக்கு அனுப்புவதை விவசாயிகள் ஏற்றுக் கொள்கின்றனர் என்றனர்.