விலை இல்லாததால் கத்தரிக்காயுடன் செடியை உழுது உரமாக்கும் அவலம்
போடி:தேனி மாவட்டம் போடி அருகே பொட்டிப்புரம் பகுதியில் கத்தரிக்காய் நல்ல விளைச்சல் இருந்தும் போதிய விலை இல்லாததால் அச்செடிகளை உழுது விவசாயிகள் உரமாக்கி வருகின்றனர்.
போடி அருகே பொட்டிப்புரம், ராமகிருஷ்ணாபுரம், ராசிங்காபுரம், சிலமலை பகுதிகளில் கத்தரி சாகுபடி செய்யப்பட்டு உள்ளன. கத்தரி நடவு செய்த 60 முதல் 70 நாட்களில் விளைந்து கத்தரிக்காய் பலன் தரும். கடந்த மாதம் கிலோ ரூ.20 முதல் 25 வரை விலை போனது. தற்போது கத்தரிக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளதால் போதிய விலை இன்றி கிலோ ரூ.6 முதல் ரூ. 7 வரை வியாபாரிகள் விலைக்கு வாங்கி வருகின்றனர். சில்லரையில் கிலோ ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனை செய்கின்றனர். தக்காளி போல கத்தரிக்கும் விலை இல்லை. இதனால் விதைப்பு, மருந்தடிப்பு, களை பறிப்பு, காய்பறிப்பு கூலிக்கு கூட கட்டுப்படியாக நிலையில் விவசாயிகள் கத்தரிக்காய்களை பறிக்காமல் விட்டுள்ளனர். சில விவசாயிகள் கத்தரி செடிகளை டிராக்டர் ரொட்டேடர் மூலம் நிலங்களில் உழுது உரமாக்கி வருகின்றனர்.