தேனி கோடை காலத்திலும் குளுமையாக இருக்கும் ரகசியம் இதுதான்; பசுமை போர்வை அதிகரிப்பு : ரேஞ்சர் தகவல்
தேனி : ‘தேனி மாவட்டத்தில் 34 சதவீதம் பசுமை போர்வை அதிகரித்துள்ளதால் கோடைகாலத்திலும் குளுமையாக இருப்பதற்கு இதுதான் ரகசியம்.’ என, தேனி ரேஞ்சர் சிவராம் தெரிவித்தார்.
தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் காடுகள் இருப்பதை உறுதி செய்தால், உணவு சங்கிலி சீராகினால் நீர்வளம் அதிகரிக்கும். எனவே காடுகள் பரப்பளவை குறைக்கக்கூடாது. பள்ளி, கல்லுாரிகள், அரசு நிறுவனங்கள், வீட்டுக்கு ஒரு மரக்கன்றுகள் வளர்த்து, கிரீன் கவர் பரப்பளவை அதிகரிக்கும் வகையில் வன கோட்டத்தின் சார்பில் பல்வேறு திட்டங்களில் அரிய வகை மரக்கன்றுகளும், பட்டா நிலங்களில் விவசாயிகள், நில உரிமையாளர்களுக்கு பயன் தரும் மரக்கன்றுகளை வளர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் டி.என்.,ட்ரீ பீடியா செயலியில் வீட்டில் இருப்பவர்கள் ஒரு மரக்கன்றுகளை நட்டு, அதனை செல்பியாக பதிவேற்றம் செய்து , மாவட்டத்தின் கிரீன் கவர் முன்னெடுப்புப் பணிகளில் தங்களை இணைத்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமலர் நாளிதழின் அன்புடன் அதிகாரி பகுதிக்காக தேனி வனச்சரகர் சிவராம் பேசியதாவது:
மாவட்டத்தில் பசுமை போர்வை அளவு என்ன
மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவில் 33 சதவீதம் காடுகள் அவசியம். தேனி மாவட்டத்தில் காடுகள் 33.70 சதவீதம் உள்ளது. இதில் மாவட்டம் முழுவதும் 27 வனக்காடுகள் வெவ்வேறு பகுதிகளில் அமைந்துள்ளன. இது 795.81 சதுர கி.மீ., துாரம் அமைந்துள்ளது. 19 பகுதிகளில் காப்புக்காடுகள் 255.44 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளன. அதிலும் 8 காப்புக்காடுகள் வளம் நிறைந்தவை.மொத்த பரப்பளவில் 33.70 சதுர மீட்டர் பரப்பளவில் பசுமையாக உள்ளன. இது இதற்கு முன் இருந்தது. தற்போது 43,000 எக்டேரில் அமைந்துள்ளன. இது 34 சதவீதமாகும். இது தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத பசுமை போர்வை குறியீடு ஆகும். அதனால்தான் தேனி கோடை காலத்திலும் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளுமையாக இருக்கிறது. மண்வளமும் அதிகரிக்க காரணமும் இதுதான். இதனை 50 சதவீதமாக உயர்த்த மாவட்ட வன அலுவலர் வழிகாட்டுதலில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
என்ன வகையில் பசுமை திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
காலநிலை மாற்றத்திற்கான உயிர்ப்பன்மை பாதுகாப்பு,பசுமையாக்குதல் திட்டம் உள்ளது. இதில் அனைத்து வனச்சரகங்களிலும் 1,50,200 மரக்கன்றுகள் நடவு செய்து, அந்த மரக்கன்றுகளின் தாவரவியல் பெயர், வளர்ந்துள்ள கால அளவு, கால இடைவெளியில் வளரும் திறன் தொடர்ந்து கண்காணிப்பது கடமையாக உள்ளது. ஒவ்வொரு வனச்சரகத்திலும் 24 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இதில் தொடர் பராமரிப்பில் வெயில், வீட்டு விலங்குகளின் தொந்தரவு, வேர்பிடிப்பு இன்றி பாதிப்பு ஏற்பட்டு சரகத்திற்கு 800 மரக்கன்றுகள் புனரமைப்பிற்காக மீண்டும் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு பசுமை இயக்கம் திட்ட பணிகள் குறித்து
அதில் 30 ஆயிரம் பனைவிதைகள் வளரும் நீர்பாங்கான இடங்களை கண்டறிந்து நட்டுள்ளோம். நட்டுள்ள ஒவ்வொரு மரக்கன்றுக்கும் ‘ஜியோ டேக்’ மூலம் விபரங்கள் வனத்துறை இணையத்தில், அந்தந்த வனச்சரகர்கள் பதிவேற்றம் செய்து தொடர் கண்காணிப்பில் வளர்க்கிறோம். இதுதவிர பள்ளி, கல்லுாரிகள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு கோரிக்கை வைத்தால் நட்டு தருகிறோம். வீடுதோறும் இடம் இருந்தால் அவர்கள் ஒரு தாவரத்தையாவது நட்டு, தங்களது செல்பியுடன் ‘ட்ரீபீடியோ’ செயலியில் பதிவேற்றம் செய்யலாம்.
மத்திய அரசின் ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா திட்டம் பற்றி
இது மத்திய அரசின் விவசாய ஒருங்கிணைந்த மேம்பாட்டு பணிக்கான திட்டம். இதில் மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. வேளாண் துறை பரிந்துரையில் விண்ணப்பித்தோருக்கு 50 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கி , நடவு செய்து கண்காணித்து வருகிறோம்.
நெடுஞ்சாலைகளில் வெட்டும் மரங்களுக்கு பதிலாக நடப்படுகிறதா
இதுகுறித்து வனத்துறையிடம் பொது மக்கள் புகார் அளிக்கலாம். தேசிய, மாநில நெடுஞ்சாலையில் மரங்களை ஒப்பந்ததாரர்களோ, துறை அதிகாரிகளோ வெட்டினால் ஒரு மரத்திற்கு பதில் 10 மரக்கன்றுகள் நட்டு தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என விதிஉள்ளது.
மாவட்டத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு, கண்காணிப்பில் உள்ளன. தொழிற்சாலைகள், பள்ளிக் கல்லுாரிகள், நிறுவனங்களுக்கு மரக்கன்று தேவை எனில் மாவட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். தனியார் நிறுவனங்களும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகளில் பங்கேற்று மாவட்டத்தின் பசுமை போர்வை சதவீதத்தை 50 சதவீதமாக அதிகரிக்க முன் வர வேண்டும்.
வனங்களில் காட்டுத்தீ ஏற்படுவது பற்றி
இயற்கையில் இடி, மின்னலை தவிர ஒருபோதும் தாவரங்கள் தீ பற்றி எரிவதில்லை. ஈச்சம்மார் வணிகத்திற்காக குறைந்த உயரத்தில் வளர்ந்துள்ள போதைப்புற்களுக்கு தீ வைக்கும் நபர்களை கண்காணித்து வருகிறோம். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவர். காட்டுத்தீ மனிதர்கள் சுயலாபத்திற்காக வைக்கின்றனர். இதில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம்.