ஆனயிறங்கல் அணை திறப்பு கோடையில் திறக்கும் ஒரே அணை
மூணாறு: பூப்பாறை அருகில் உள்ள ஆனயிறங்கல் அணை நேற்று திறக்கப்பட்டது.
இடுக்கி மாவட்டம் பூப்பாறை அருகில் உள்ள ஆனயிறங்கல் அணை சுற்றுலா பகுதியாக இருந்தது. அங்கு மின்வாரியத்தின் ஹைடல் டூரிசம் சார்பில் சுற்றுலா படகுகள் இயக்கப்பட்டன. அவை, அப்பகுதியில் நடமாடும் காட்டு யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி கேரள உயர் நீதி மன்றம் உத்தரவுபடி சுற்றுலா படகு சேவை 2023 ஜூலையில் நிறுத்தப்பட்டது.
துணை அணை: பன்னியாறு நீர் மின் நிலையம் திட்டத்திற்கு முக்கிய நீர் ஆதாரமான பொன்முடி அணையின் துணை அணையாக ஆனயிறங்கல் அணை உள்ளது. பொன்முடி அணையின் நீர் மட்டத்தை பொறுத்து ஆனயிறங்கல் அணை திறக்கப்படும். தற்போது பொன்முடி அணையில் நீர்மட்டம் குறைந்து வருவதால் ஆனயிறங்கல் அணையில் இருந்து 11.57 கன அடி தண்ணீர் நேற்று திறந்து விடப்பட்டது. பன்னியாறு ஆற்றின் கரையோரம் பூப்பாறை, ராஜாக்காடு, ராஜகுமாரி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடப்பட்டது.
கேரளாவில் கோடை காலத்தில் ஆனயிறங்கல் அணை மட்டும் திறக்கப்படும் என்பது குறிப்பிடதக்கது.