போலீசாரை தாக்கிய ஐந்து பேர் கைது
மூணாறு : கட்டப்பனை அருகே மதுபோதையில் போலீசாரை தாக்கிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே கல்யாணதண்டு மலை பகுதியில் பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பெயரில் ஏழு பேர் கொண்ட கும்பல் மார்ச் 5ல் இரவில் மது அருந்தி விட்டு போதையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டனர். கட்டப்பனை போலீசாருக்கு மக்கள் தகவல் அளித்தனர். அதனை விசாரிக்கச் சென்ற போலீசாரை மது போதையில் இருந்தவர்கள் தாக்கினர். அதில் போலீஸ்காரர்கள் ஜிலூப், அல்பாஷ், பிபின், ராகுல்மோகன்தாஸ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
அச்சம்பவம் தொடர்பாக மூலக்கரை மேட்டைச் சேர்ந்த ஸ்ரீஜித் 22, நிர்மலா சிட்டியை சேர்ந்த அஜித் 29, வாழவரா வைச் சேர்ந்த விஷ்ணு 27, அவரது சகோதரர் வினேஷ் 26, மற்றும் நந்து 27, ஆகியோரை கட்டப்பனை இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் கைது செய்தனர்.
போலீசாரிடம் இருந்து தப்ப முயன்று ஓடியபோது கீழே விழுந்து பலத்த காயம் அடைந்த சகோதரர்கள் ஷிஜின், ஷிபின் ஆகியோர் கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.