சேமியா, கோதுமை தோசை வேண்டாம்: மாணவியர் வெறுப்பு
தேனி:தேனி, சீர்மரபினர் மாணவியர் விடுதியில் ஆய்வு செய்த மாநில சட்டசபை பொது கணக்கீட்டு குழுவிடம், ‘சேமியா, கோதுமை தோசையை தினசரி உணவு பட்டியலில் இருந்து நீக்க உதவுங்கள்’ என, மாணவியர் கோரிக்கை விடுத்தனர்.
கணக்கீட்டு குழு தலைவர் தலைவர் செல்வப்பெருந்தகை, குழு உறுப்பினர்கள் போளூர் எம்.எல்.ஏ., கிருஷ்ணமூர்த்தி, சந்திரன் – திருத்தணி, சேகர் – பரமத்திவேலுார், அய்யப்பன் – கடலுார், செந்தில்குமார் – பழநி, குழு துணை செயலர் பாலசீனிவாசன் ஆகியோர் நேற்று அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள சீர்மரபினர் மாணவியர் விடுதியை பார்வையிட்டனர்.
விடுதியில், ‘கட்டில் உள்ளதா, கழிப்பறை முறையாக பராமரிக்கப்படுகிறதா?’ எனக் கேட்டனர். வெளியே வந்த குழு தலைவரிடம், மாணவியர் சிலர், ‘தினசரி சாப்பாட்டில் சேமியா, கோதுமை மாவு தோசை வேண்டாம். அதை மாற்றி வேறு உணவுகளை வழங்க உதவுங்கள்’ என்றனர்.
சட்டசபையில் பரிந்துரைப்பதாக குழுவினர்தெரிவித்தார். ஆய்வின்போது கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உடனிருந்தார்.