சித்தா, ஆயுர்வேதா, யுனானி , ஓமியோபதி மருந்துகளின் தரப் பரிசோதனை ஆய்வகம் மதுரையில் அமைக்க கோரிக்கை
கம்பம்: ‘அலோபதி தவிர்த்து சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி உள்ளிட்ட இந்திய மருந்துகளின் தரம் பரிசோதனை ஆய்வகத்தை மதுரையில் அமைக்க வேண்டும்.’ என, கோரிக்கை எழுந்துள்ளது.
கடந்தாண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகள் தரமற்றவை என புகார் எழுந்து, தற்போது அனைத்து இருமல் மருந்துகளும், மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற, 2 ஆய்வகங்களின் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அலோபதி மருந்து மாத்திரைகளை பரிசோதிக்க சென்னையில் மட்டுமே ஆய்வகம் உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், மண்டல ஆய்வகம் ஒன்று ரூ.20 கோடியில் மதுரையில் துவக்கப்பட்டது. ஆனால் அங்கேயும் போதிய அலுவலர்கள் நியமிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் சமீபகாலமாக அலோபதி அல்லாத மருத்துவ முறைகள் பிரபலமாகி வருகிறது. குறிப்பாக சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி உள்ளிட்ட மருந்து மாத்திரைகள், சூரணங்கள், லேகியங்கள், வலி நிவாரண தைலங்கள் முதலியவற்றை மாதிரிகள் எடுத்து தரப் பரிசோதனை செய்யப்படுவதே இல்லை. அதற்கான பிரத்யேக அலுவலர்களும் இல்லை.
இதற்கென ஆய்வகம் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் சென்னை அண்ணாநகரில் உள்ளது.
மாவட்டந்தோறும் உள்ள இந்திய மருத்துவமுறைகளுக்கான டிரக் இன்ஸ்பெக்டர்கள் அனைவரும் மாதிரிகள் எடுத்து சென்னைக்கு அனுப்ப வேண்டி உள்ளது. முடிவுகளை பெற கால விரயம் ஆகிறது.
அலோபதி தவிர்த்து பிற இந்திய மருந்துகளில் போலிகள் உலா வருவதை தடுக்க, மதுரையில் மண்டல அளவிலான இந்திய அரசின் சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ ஆய்வகம் ஒன்றை அமைக்க ஆயுஷ் அமைச்சகம் முன்வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.