சாரல் மழையால் முருங்கை பூக்கள் உதிர்வு: விவசாயிகள் ஏமாற்றம்
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் சாரல் மழையால் முருங்கை மரங்களில் பூக்கள் உதிர்ந்ததால் விளைச்சல் பாதிக்கும் என்பதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஆண்டிபட்டி பகுதியில் திம்மரசநாயக்கனூர், பொம்மிநாயக்கன்பட்டி, டி.சுப்புலாபுரம், ராஜகோபாலன்பட்டி, ஏத்தக்கோவில், சித்தயகவுண்டன்பட்டி, கொத்தப்பட்டி, கன்னியப்பபிள்ளைபட்டி, ராஜதானி, கணேசபுரம் உட்பட பல கிராமங்களில் முருங்கை சாகுபடி உள்ளது. காற்று, மழை காலங்களில் முருங்கை விளைச்சல் குறையும். கடந்த சில மாதங்களுக்குப் பின் முருங்கையில் பூக்கள் எடுத்து காய்ப்பு துவங்கியது
இந்நிலையில் ஆண்டிபட்டி பகுதியில் கடந்த இரு நாட்களாக அடுத்தடுத்து சாரல் மழை பெய்து வருகிறது. சாரல் மழையால் முருங்கை மரங்களில் இருந்த பூக்கள் உதிர்ந்து விட்டது. இன்னும் சில வாரங்களில் காய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது: முருங்கையில் காய்ப்புக்கான சீசன் துவங்கிய நிலையில் சாரல் மழையால் பூக்கள் உதிர்ந்து விட்டது. மீண்டும் பூக்கள் எடுப்பதற்கு சில வாரங்கள் ஆகும். தற்போது முருங்கைக்காய் கிலோ ரூ.50 வரை விலை போகிறது. விலை கிடைக்கும் போது விளைச்சல் பாதிப்பு விவசாயிகளுக்கு கவலை ஏற்படுத்தி விட்டது என்றனர்.