Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

மீண்டும் குரங்கணி- டாப்ஸ்டேஷன் இடையே ரோப்கார் திட்டம் துவங்குமா? அமைச்சர்கள் அறிவிப்பு செய்தும் முன்னேற்றம் இல்லை

போடி; இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமான குரங்கணி – டாப் ஸ்டேஷனுக்கு மீண்டும் ரோப்கார் அமைக்கும் திட்டம் துவக்கப்படுமா என எதிர்பார்ப்பு உள்ளது. திட்டம் செயல் படுத்துவதாக அமைச்சர்கள் அறிவித்தும் நடைமுறைப் படுத்துவதில் முன்னேற்றம் இல்லை.

போடி ஒன்றியம், கொட்டகுடி ஊராட்சிக்கு உட்பட்ட குரங்கணி — டாப் ஸ்டேஷன் தமிழக, கேரள எல்லையை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. போடியில் இருந்து 18 கி.மீ., தொலைவில் குரங்கணி வரை ரோடு வசதி உள்ளது. அங்கிருந்து 22 கி.மீ., தொலைவில் உள்ள டாப்ஸ்டேஷனுக்கு ரோடு வசதி இல்லை. இதனால் போடியில் இருந்து மூணாறு செல்ல 40 கி.மீ., தூரம் கூடுதலாக பயணிக்க வேண்டியுள்ளது. இயற்கை அழகை ரசிக்க சுற்றுலா பயணிகள் பலரும் குரங்கணியில் இருந்து டாப்ஸ்டேஷன் வழியாக மூணாறுக்கு நடந்தே செல்கின்றனர்.

ஆங்கிலேயர் காலத்தில் கேரளாவில் விளையும் தேயிலை, ஏலம், மிளகு உள்ளிட்ட வாசனை பொருட்களை தேனி மாவட்டத்திற்கு கொண்டு வர டாப் ஸ்டேஷனில் இருந்து குரங்கணி வரை ரோப்கார் வசதி செய்யப்பட்டு இருந்தது. அதன் பின் பராமரிப்பு இன்றி ரோப்கார் முடங்கியது. தற்போது அதற்கான தடயம் கூட இல்லை.

குரங்கணி டாப் ஸ்டேஷன் பகுதியை 14 ஆண்டுகளுக்கு முன் ஸ்பைசஸ் சுற்றுலா தலமாக அறிவித்து ரூ. 70 லட்சம் செலவில் வளர்ச்சிப் பணிகள் நடந்தது. சுற்றுலா பயணிகள் ரோப்காரில் பயணிக்கும் வகையில் டாப்ஸ்டேஷன் ரோப்கார் அமைத்திட டாடா கம்பெனி அனுமதி கோரியது. தேனி மாவட்ட நிர்வாகம் பரிசீலனை செய்தது. என்ன காரணத்தினாலோ திட்டம் கிடப்பில் போடப்பட்டன.

பின் குரங்கணி, டாப்ஸ்டேஷன் இடையே ரோப்கார் அமைப்பது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என 2 ஆண்டுகளுக்கு முன்பு குரங்கணிக்கு வந்த மாநில அமைச்சர்கள் பெரியசாமி, ஏ.வ.வேலு கூறினர். இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

ரோப்கார் வசதியை ஏற்படுத்த மத்திய அரசு மூலம் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வசம் ஒப்படைக்கப்பட்டன. இதற்கான திட்ட மதிப்பு தயாரிக்கும் பணி துவங்கி ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் கிடப்பில் உள்ளன.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வரும் நிலையில் குரங்கணி டாப் ஸ்டேஷனுக்கு ரோப்கார் அமைப்பதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.பல லட்சம் வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே,ரோப்கார் வசதி ஏற்படுத்திட அரசு நடவடிக்கை எடுக்க சுற்றுலா பயணிகள், விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *