Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

தமிழக பட்ஜெட்டிற்கு ஆதரவும் எதிர்ப்பும் பல்வேறு தரப்பினர் சொல்வது என்ன

வியாபாரிகளுக்கு ஏதும் இல்லை

-நடேசன், தலைவர், மாவட்ட வியாபாரிகள் சங்கம்,தேனி

தமிழக பட்ஜெட்டில் வியாபாரிகளுக்கு பயனளிக்கும் வகையில் ஏதும் இல்லை. ஜி.எஸ்.டி., குறைப்பு, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தொடர்பாக அறிவிப்பு இல்லை.தொழிலாளர்களுக்கு உயர்வு தரும் வகையில் சில அறிவிப்புகள் உள்ளன. உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.37 ஆயிரம் கோடி ஒதுக்கியது வரவேற்க தக்கது. மற்றபடி சுமாரான பட்ஜெட் ஆகும்.

அரசு ஊழியர்ககள் அதிருப்தி

-விஸ்வநாதன்,மாவட்ட செயலாளர், அரசு ஊழியர்கள் சங்கம், தேனி

பட்ஜெட் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம் தருகிறது. ஈட்டிய விடுப்பு சரண்டர் ஏப்.,2026ல் இருந்து வழங்கப்படும் என்கின்றனர். அப்போது சூழல் எவ்வாறு இருக்கும் என தெரியாது. ஆட்சியின் கடைசி முழு பட்ஜெட் என்பதால் அறிவித்துள்ளனர். அடுத்த மானிய கோரிக்கையில் ஏதாவது அறிவிப்பு வெளியாகவில்லை எனில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பும், அதிருப்தியும் உள்ளது. முதலில் 72 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றனர், தற்போது 40 ஆயிரம் என்கின்றனர். பட்டதாரிகளுக்கு டெட், டி.ஆர்.பி., தேர்ச்சி பெற்று காத்துள்ளனர். தற்போது 1782 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், 800பட்டதாரி ஆசிரியர்கள் நிரப்படும் என தெரிவித்துள்ளனர். அனைத்தும் எழுத்து பூர்வமாக மட்டும் உள்ளது செயலில் ஏதும் இல்லை.

சிறு,குறு வியாபாரிகள் ஏமாற்றம்

-துர்காவஜ்ரவேல், தொழிலதிபர், சின்னமனூர்

மதுரையில் காலனி பூங்கா அமைப்பது தொழில் வளர்ச்சிக்கு உதவும். சமீபத்தில் ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்த யூ.எல்.ஐ. ( Unified Lending inter Face ) சிறு குறு மற்றும் பெரிய தொழில் செய்வோர் வங்கிகளில் கடன் பெறுவதை எளிமையாக்கும் அறிவிப்பை தமிழகத்தில் விரைந்து செயல்படுத்தப்படும் என்பது வரவேற்க தக்கது. பெண்கள் பெயரில் சொத்துக்கள் பதிவு செய்தால், பத்திரப் பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறையும் என்ற அறிவிப்பு மகளிர் உரிமைக்கு வழி வகுக்கிறது, இது பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்கிறது. தொழில் துவங்குவதில் உள்ள இடர்பாடுகளை களைய ‘சிங்கிள் விண்டோ சிஸ்டம்’ அறிமுகம் செய்தால், தமிழகம் தொழில் துறையில் இரண்டாவது இடத்திலிருந்து முதல் இடத்திற்கு வரும். இந்த பட்ஜெட்டில் சிறு குறு வியாபாரிகளுக்கென அறிவிப்புக்களை எதிர்பார்த்தனர். அது இடம் பெறாதது வருத்தம்.

வரி குறைப்பு இல்லாதது ஏமாற்றம்

-முருகன், வர்த்தக சங்க தலைவர், கம்பம்

பட்ஜெட்டில் சிறு குறு வர்த்தகர்களுக்கு சலுகை அறிவிப்புக்களை எதிர்பார்த்தோம். குறிப்பாக வரி குறைப்பை எதிர்பார்த்தோம், அது இல்லாதது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வர்த்தகர்களுக்கு என எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம். சொத்துவரி, தொழில் வரி செலுத்தும் நிலையில் டிரேடு லைசென்ஸ் வரி வசூலிப்பது ஏன். ராமநாதபுரத்தில் விமான நிலையம் வரவேற்க கூடியது, வர்த்தகர்களுக்கு பயன்படும். வணிக நிறுவனங்களை கணக்கெடுக்க ரூ.5 கோடி என்பது எதற்காக என தெளிவாக குறிப்பிடப்படவில்லை. ஒரு லட்சம் மகளிரை தொழில் முனைவோராக மாற்றும் திட்டம், 40 ஆயிரம் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்பது வரவேற்க கூடியது.

லொட லொடா பஸ்கள் ஓரங்கட்டப்படும்

-உமாமகேஸ்வரன், டிரைவர், அரசு போக்குவரத்து கழகம், பெரியகுளம்.–

தமிழகத்தில் டீசல் பஸ்களை இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பஸ்களாக மறுசீரமைப்பால் சுற்றுச்சூழல் பாதுகாக்கும் இதனை வரவேற்கிறேன். போக்குவரத்துத்துறையை மேம்படுத்த ரூ.12,964 கோடி ஒதுக்கியுள்ளது. இதனால் ஓட்டுவதற்கு ‘லயாக்கற்ற பஸ்கள்’ ஓரங்கட்டப்பட்டு புதிய பஸ்கள் கிடைக்கும். அளவுக்குமீறி மதுகுடித்து விட்டு பஸ்சில் ஏறி பயணிகள், கண்டக்டர், டிரைவர்களுக்கு இம்சையை கொடுப்பவர்களை மவுத்அனலைசர் கருவி மூலம் கண்டறிந்து, பஸ்சிலிருந்து இறக்கி விடும் அறிவிப்பை எதிர்பார்த்தோம். ஒருங்கிணைந்த நீர் மேம்பாட்டு திட்டத்தின் வாயிலாக பெரியகுளம் பகுதியில் வைகை அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணையை தூர் வார வேண்டும். போக்குவரத்து பணியாளர்களுக்கு சம்பளம் உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.–

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி தொகை வரவேற்க தக்கது

-செல்வரதி, இல்லத்தரசி, கூடலுார்

வளர்ந்து வரும் மாவட்டமான தேனிக்கு பயன் உள்ள திட்டம் இல்லாதது வருத்தமடைய செய்கிறது. நீர்வளத் துறைக்கு ரூ.9460 கோடி ஒதுக்கீடு என்பது மகிழ்ச்சிதான். முல்லைப் பெரியாற்றின் தலைமதகு பகுதியில் உள்ள தேனி மாவட்டத்தில் நீர் ஆதாரத்தை மேலும் பலப்படுத்த கண்மாய்கள் தூர் வாருவது, புதியதாக தடுப்பணைகள் கட்டுவது ஆகிய பணிகள் நடக்குமா என்பதுதான் சந்தேகம். பெற்றோரை இழந்த 50 ஆயிரம் குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்குவது வரவேற்கக் கூடிய ஒன்றாகும். தகுதியுள்ள இன்னும் ஏராளமான பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த பட்ஜெட் கூடுதல் சிறப்பம்சங்களுடன் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றம் தான்.

சொத்து பதிவு சலுகை பெண்கள் உரிமையை நிலை நாட்டும் -மங்கை, நூலகர் சி.பி.ஏ., கல்லூரி போடி

இளைஞர் நலன் விளையாட்டிற்கு ரூ. 572 கோடி, ஒரு லட்சம் மாணவர்களுக்கு ரூ.2500 கோடி கல்வி கடன், கிராமப்புற மாணவிகள் மேற்படிப்பு படிக்க தரமான,பாதுகாப்பு அடிப்படையில் மகளிர் விடுதி, ட்ரோன் தொடர்பாக மாணவர்கள் படிக்க புதிய பட்டப்படிப்பு அறிமுகம், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதம் ரூ. 2000 உதவித் தொகை, பழமையான கோயில் திருப்பணிகளுக்கு ரூ.125 கோடி ஒதுக்கீடு, பெண்கள் பெயரில் சொத்துப் பதிவு கட்டணம் குறைப்பு மகளிர் உரிமையை நிலை நாட்டும். மக்களுக்கு இலவசங்களை வழங்குவதை காட்டிலும், படித்த இளைஞர்கள், மகளிருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டமாக இருக்க வேண்டும். படித்த இளைஞர்களுக்கு அரசு தொழிற்சாலை அமைப்பதற்கான திட்டம் இல்லாதது ஏமாற்றம் தருகிறது.

200 சதவீதம் வரி அதிகரிப்பு

-பாண்டியராஜன், தலைவர், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு. ஆண்டிபட்டி

பட்ஜெட்டில் வரி வருவாய் வளர்ச்சி 14.6 சதவீதம் அதிகரித்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. சிறு வணிகர்களுக்கான தொழில் லைசென்ஸ் கட்டணம் ஆண்டுக்கு ரூ.125 லிருந்து ரூ.500 ஆகவும், ரூ.450 ஆக இருந்த தொழில் வரி தற்போது ரூ.910 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்டி கடைக்கும் 200 சதவீதம் வரி அதிகரித்துள்ளது. சிறு வணிகம் பாதிப்படைகிறது. செஸ் விளையாட்டை அரசு பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கும் முடிவு வரவேற்கத்தக்கது. மாணவர்களின் மூளைத்திறனை மேம்படுத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *