Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

பலன்தராத , வெற்று அறிவிப்பு வேளாண் பட்ஜெட்: விவசாயிகள் விளாசல்

ஏமாற்றமளித்த பட்ஜெட்

–பாண்டியன், தலைவர், தேனி மாவட்ட விவசாயிகள் சங்கம்

விவசாயிகளுக்கு ஏமாற்றமளித்த பட்ஜெட். மண் வளம் மேம்படுத்துதல் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. பருவமழை பொய்த்தால் நீலத்தடி நீர் தான் விவசாயத்திற்கு ஆதாரமாக உள்ளது. தேனி மாவட்டத்தில் 35 ஆயிரத்திற்கும் அதிகமான மோட்டார் பம்பு செட்டுகள் உள்ளன. நிலத்தடி நீரை பெருக்குவது குறித்து எந்த ஒரு திட்டமும் இல்லை. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மாவட்டங்களில் விவசாய நிலங்களில் வன விலங்குகளால் அச்சுறுத்தல் உள்ளது. இதனை தடுக்கும் விதமாக சோலார் தடுப்பு வேலி பற்றிய அறிவிப்பும் இல்லை. தக்காளி, காய்கறிகளில் இருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பிற்கான திட்டங்கள் ஏதும் இல்லை. மலைவாழ், பழங்குடி மக்கள் விளை நிலங்கள், வன நிலங்களாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் அந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை.

எதிர்பார்த்த அறிவிப்பு இல்லை

-முருகன், விவசாயி, பெரியகுளம்

மாவட்டத்தில் மாம்பழ கூல் தயாரிக்கும் தொழிற்சாலை அமையும் என எதிர்பார்த்தோம் ஆனால் அறிவிப்பு வராதது ஏமாற்றம். திருநெல்வேலியில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் மாம்பழ கூல் தொழிற்சாலை, அகமலை விவசாய பகுதியை கரிம உரம பயன்பாடு மண்டலமாக அறிவிக்க கோரியிருந்தோம். மாவட்டத்தில் நெல், மல்லி, சிறுதானியம் தொடர்பான அறிவிப்பு ஆறுதலாக உள்ளது. உழவர் சந்தை காய்கறிகள் ஆன்லைன் மூலம் டெலிவரி செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்ற திட்டம் புதிதாக உள்ளது. வேளாண் பட்ஜெட்டில் கடந்தாண்டை விட ரூ.3ஆயிரம் கோடி அதிகமாக திட்டமிடப்பட்டுள்ளது வரவேற்க தக்கது. நெல் சாகுபடியில் டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு தனி திட்டம் வகுத்திருப்பது சிறப்பானது.

வரவேற்க தக்க பட்ஜெட்

-ரவிச்சந்திரன், விவசாயி, போடி

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ. 215 லிருந்து ரூ. 349 ஆக உயர்த்திட ரூ.297 கோடி ஒதுக்கீடு, கரும்பு சாகுபடி மேம்பாடு திட்டத்திற்காக ரூ.10.63 கோடி ஒதுக்கீடு,சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது ரூ.6 லட்சம் வழங்குவது, நெல் உற்பத்தியில் சாதனை படைக்கும் முன்னோடி விவசாயிகளை ஜப்பான், சீனா, வியட்நாம் நாடுகளுக்கு அழைத்து செல்வது வரவேற்க தக்கது. ரூ.1.50 கோடி செலவில் மின் இணைப்பு இல்லாத 1000 விவசாயிகளுக்கு மானியத்தில் சூரிய சக்தி மூலம் இயங்க கூடிய பம்புசெட் வழங்குவது

விவசாயிகளுக்கு பயன்படும் பட்ஜெட் ஆக உள்ளது. மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மாம்பழம் பதனிடும் தொழிற்சாலை குறித்து அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்.

ஏமாற்றமே மிச்சம்

-மீனாட்சிசுந்தரம், ஆண்டிபட்டி

ரசாயன உரம்,மருந்துகளால் மண்வளம் பாதித்துள்ளது. முதல்வரின் மண்ணுயிர் காப்போம் திட்டத்திற்கு ஒதுக்கிய ரூ.206 கோடி மிக குறைவானது. நிலத்தை பாதுகாக்கும் பசுந்தாள் உரம் 2 லட்சம் ஏக்கரில் பயிரிடும் திட்டம் வரவேற்கத்தக்கது. விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் தடையின்றி கிடைக்க அறிவிப்பு இல்லை. கரும்பு, நெல், காய்கறி உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கட்டுபடியாகும் ஆதார விலை குறித்த அறிவிப்பு இல்லை. தமிழகத்தில் தென்னை உற்பத்தியில் தேனி 4ம் இடத்தில் உள்ளது. இதில் உப பொருட்கள் உற்பத்தி கூடங்கள் அறிவிப்பு இல்லை. வறட்சியான ஆண்டிபட்டி பகுதியில் நீர் ஆதாரத்தை மேம்படுத்த முதல்வரிடம் விவசாயிகள் பலமுறை மனுக்கள் கொடுத்தும் நீர் ஆதாரம் மேம்படுத்தும் நடவடிக்கை குறித்த அறிவிப்பு இல்லை. தற்போதுள்ள பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாகவே உள்ளது.

மா வில் முன்னோடி திட்டம் இல்லை

-ராஜலட்சுமி, விவசாயி, பெரியகுளம்

–ரூ.5 கோடியில் பலா மேம்பாட்டு இயக்கம் திட்டம் வரவேற்கிறேன். அதே நேரத்தில் தேனி மாவட்டத்தில் அதிகம் விளையும் முக்கனிகளில் மா, வாழைக்கும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ரசத்திற்கு புளியை சேர்ப்பது போல் மாங்காயை அரைத்து ‘மெச்சூர்’ பவுடர்’ தயாரித்து கேரளாவிற்கு அனுப்பும் முன்னோடி திட்டத்தை மா விவசாயிகள் எதிர்பார்த்தனர். அத் திட்டம் பற்றிய அறிவிப்பு இல்லை. சோத்துப்பாறை அணை கீழ் பகுதி வராகநதியிலிருந்து குள்ளப்புரம் வரை 20 கி.மீ., சென்று வைகை அணையில் கலக்கும் வராகநதி கழிவுநீரால் மாசுபட்டுள்ளது. வராகநதியை தூய்மைப்படுத்தி கரைகளில் பனை விதை நடும் திட்டம் இல்லை. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லும் ‘கண்டுனர் சுற்றுலா திட்டம்’ வரவேற்கிறேன். இதன் மூலம் இளையதலைமுறையினருக்கு விவசாயத்தின் மீது பற்றுதல் அதிகரிக்கும்.

கணக்கு காட்டுவதற்கான பட்ஜெட்

-சதீஷ்பாபு, பாரதிய கிசான் சங்க மாநில செயற்குழு உறுப்பினர், கூடலுார்

காய்கறி சாகுபடி பரப்பு அதிகரிப்பதற்கு ரூ.2.4 கோடி, அறுவடைக்குப் பின் செய்யும் மேலாண்மை பணிக்கு ரூ.18 கோடி, கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை ரூ.297 கோடி ஒதுக்கீடு மகிழ்ச்சிதான். ஆனால் இது போதுமானதாக இல்லை. மாவட்டத்தில் மொத்த காய்கறி கொள்முதல் நிலையம் என்ற அறிவிப்பு இல்லை என்பது ஏமாற்றம் அடையச் செய்துள்ளது. மாவட்டத்தில் தடுப்பணை கட்டும் திட்டம் எதுவும் இல்லை. அனைத்து விவசாயிகளையும் கவரும் வகையில் மொத்தம் ரூ.45 ஆயிரம் கோடி விவசாய பணிக்காக ஒதுக்கீடு செய்திருந்தாலும் இது வழக்கமான ஒன்றாகவே உள்ளது. நிரந்தரமாக பயன்பெறும் வகையில் நீர்நிலை மேலாண்மைக்கான புதிய திட்டம் எதுவும் இல்லை. சொட்டுநீர் பாசனத்திற்கு ரூ.1168 கோடி ஒதுக்கீடு என்பது மிகக் குறைவு. கணக்கு காட்டுவதற்காக போடப்பட்ட பட்ஜெட் போல் தெரிகிறது.

நெல் கொள்முதல் விலை உயர்வு இல்லை

-சுகுமாறன், விவசாயிகள் சங்க செயலாளர், கம்பம்

மானாவாரி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.2 ஆயிரம் வழங்குவது, தரமான விதைகள் உற்பத்திக்கு விதைப்பண்ணை அமைக்கப்படும் என்பதும் வரவேற்கலாம். ஆயிரம் உழவன் நலச் சேவை மையங்கள் அமைக்கப்படும். இந்த திட்டத்தில் ரூ. 20 லட்சம் வரை மையம் அமைத்திட மானியம் 30 சதவீதம் வழங்கப்படும். இந்த மையத்தின் மூலம் விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருள்கள் வழங்கப்படும் என்பது வரவேற்க கூடியது. நடவு இயந்திர மானியம் 102 கோடி மகிழ்ச்சி. ஆனால் நெல்லுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க, அரசின் நெல் கொள் முதல் நிலையங்களில் கொள்முதல் விலை உயர்வு தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடாதது வருத்தமானது. நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு எதிர்பார்க்கும் வகையில் பட்ஜெட் இல்லை.

அலங்கார வார்த்தை தான்

-போஸ், விவசாயி சின்னமனூர்

வேளாண் இயற்கை முறையில் சாகுபடி செய்யும் பொருள் பூமாலை வணிக வளாகங்களில் சந்தைப்படுத்த உரிய வசதி என்பது கேலிக்குரியதாகும். காரணம் இயற்கை விவசாயத்தில் யாரும் ஆர்வம் காட்டவில்லை. இயற்கை முறையில் சாகுபடி செய்யும் பொருள்களை ஏற்றுமதி செய்ய ஆய்வக பரிசோதனைக்கு மானியம் வழங்கப்படும். தமிழ்நாடு முந்திரி வாரியம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்பது முந்திரி விவசாயிகளை ஊக்குவிக்கும். ஆனால் இந்த மாவட்டத்தின் பிரதான பயிராக விளங்கும் நெல், வாழை, திராட்சை போன்றவற்றிற்கு அறிவிப்பு இல்லாதது வருத்தமளிக்கிறது. அலங்கார வார்த்தைகளால் வெளியான பட்ஜெட்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *