‘அப்ரண்டிஸ்’ பணியாளர்களை டெப்போக்களுக்கு அனுப்ப மறுப்பு ; பராமரிப்பு பணியாளர்கள் புலம்பல்
தேனி; போக்குவரத்து கழகத்தில் ஐ.டி.ஐ., படித்து (அப்ரண்டிஸ்) தொழில் பழகுனர் பணிக்கு தேர்வு செய்துள்ளவர்களை எப்.சி., அலகிற்கு மட்டும் பயன்படுத்துகின்றனர். இவர்களை டெப்போவிற்கு அனுப்பாததால் கூடுதல் சுமையுடன் பணி புரிவதாக பராமரிப்பு பணியாளர்கள் புலம்புகின்றனர்.
அரசு போக்குவரத்துக்கழக திண்டுக்கல் மண்டலத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் பஸ்கள் இயக்கப்படுகிறது. பெரியகுளம், தேனி, போடி, தேவாரம், கம்பம் 1,2, லோயர்கேம்ப் ஆகிய 7 கிளைகள் உள்ளன. ஒவ்வொரு கிளையிலும் பஸ்கள் பராமரிப்புக்காக பணியாளர்கள் உள்ளனர்.
இது தவிர தேனி கிளையின் ஒரு பகுதியில் பஸ்கள் எப்.சி., அலகு செயல்படுகிறது. இங்கு அரசு பஸ்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை ஐ.எப்.சி., ஆண்டிற்கு ஒரு முறை எப்.சி., சரிபார்க்க படுகிறது. தற்போது பராமரிப்பு பணி பயிற்சி வழங்க ஐ.டி.ஐ., முடித்த 25 தொழிலாளர்கள் உதவித்தொகையுடன் கூடிய பழகுனர் பயிற்சிக்கு (அப்ரண்டீஸ் ) தேர்வாகினர்.இவர்கள் 25 பேரையும் எப்.சி., அலகில் மட்டும் பணி செய்கின்றனர்.இதனால் பஸ் அடிப்படை பராமரிப்பு கூட தெரிந்து கொள்ள முடிவதில்லை.
பராமரிப்பு பிரிவு பணியாளர் ஒருவர் கூறுகையில், பஸ் டெப்போக்களில் பராமரிப்பு பணிகள் அதிகம் உள்ளது. இப் பிரிவில் 50 வயதிற்கு மேற்பட்ட பணியாளர்கள் அதிகம் உள்ளனர். புதிதாக தேர்வு செய்யாதவர்களை கிளைகளுக்கு அனுப்பினால், கூடுதலாக தெரிந்து கொள்வர். கிளையில் உள்ளவர்களுக்கும் பணிச்சுமை குறையும். கிளைகளுக்கு பயிற்சி பெறும் இளைஞர்களை அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.