குடிநீர் பம்பிங் ஸ்டேஷன் அருகே பெரியாற்றில் கலக்கும் கழிவுநீர் – தொற்று நோய் பரவும் அபாயம்
கூடலுார் : லோயர்கேம்ப் குடிநீர் பம்பிங் ஸ்டேஷன் அருகே மின் வாரிய குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஆற்றில் நேரடியாக கலப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
கூடலுார் அருகே லோயர்கேம்பில் பெரியாறு நீர் மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு தலா 42 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட நான்கு ஜெனரேட்டர்கள் மூலம் 168 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இங்கு பணியாற்றும் பொறியாளர்கள், அலுவலர்களுக்கு நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் பல ஆண்டுகளாக குடிநீர் பம்பிங் ஸ்டேஷன் அருகே முல்லைப் பெரியாற்றில் கலந்து வருகிறது. இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த சில நாட்களாக முல்லைப் பெரியாற்றில் குறைவாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதில் கழிவு நீர் கலப்பதால் ஆற்றுநீரை குடிநீராகப் பயன்படுத்தும் பொது மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். கழிவு நீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். தேனி கலெக்டர் ரஞ்ஜீத்சிங் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.