‘ட்ரோன் ‘ கேமராவில் சிறுத்தை நடமாட்டம் கண்டறிய கோரிக்கை
தேவதானப்பட்டி, : ‘காமக்காபட்டி பகுதியில் 6 ஆடுகளை கடித்து கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறை வைத்துள்ள கேமராவில் பதிவு இல்லை. ‘ட்ரோன்’ கேமராவை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தேவதானப்பட்டி அருகே அட்டணம்பட்டி காமக்காபட்டி ரோடு பதினெட்டாம்படி கருப்பசாமி கோயில் பகுதியில் மார்ச் 5ல் ஆட்டு கிடையில் 6 ஆடுகளை சிறுத்தை கடித்துக் கொன்றது. மார்ச் 13ல் மாலை காமக்காபட்டியில் சிறுத்தை நடமாட்டத்தை விவசாயி, மாரிமுத்து பார்த்துள்ளார். அன்று இரவு காமக்காபட்டி கொடைக்கானல் ரோட்டில் தங்கப்பாண்டி வீட்டருகே வெளியில் கட்டப்பட்டிருந்த ஆட்டை சிறுத்தை கடித்துக் கொன்றது. சிறுத்தை காலடி தடத்தை கண்டறிந்து, ஒரு சிறுத்தை என வனத்துறையினர் உறுதி செய்தனர். தென்னந்தோப்பில் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிய இரு இடங்களில் கேமரா வைத்துள்ளனர். கேமரா வைத்து ஒரு வாரம் ஆகியும் எவ்வித பதிவும் கிடைக்கவில்லை. காமக்காபட்டி, கெங்குவார்பட்டி பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மாலை நேரங்களில் தனியாக வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர். ட்ரோன் கேமராவை வனத்துறை பயன்படுத்தி, விரைவில் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.