கானல் நீராகும் அரசு அரிசி ஆலை அமைக்கும் திட்டம் விவசாயிகள் எதிர்பார்ப்பு
தேனி : மாவட்டத்தில் அரசு சார்பில் அரிசி ஆலை அமைக்கும் பணி கானல் நீராக உள்ளது. இதனால் அரசு நெல் கொள்முதல் செய்தாலும் பிற மாவட்டங்களுக்கு அனுப்பி அதனை அரிசியாக மாற்றும் நிலை தொடர்கிறது
கம்பம் பள்ளத்தாக்கு, சின்னமனுார், வீரபாண்டி, போடி, பெரியகுளம் பகுதிகளில் சுமார் 14 ஆயிரம் எக்டேர் பரப்பில் நெல் சாகுபடியாகிறது. இதில் முல்லைப் பெரியாறு ஆற்றங்கரைகளில் உள்ள வயல்களில் இருபோக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து, அரசு சார்பில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தினர் நெல் கொள்முதல் செய்கின்றனர். இதற்காக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டும் அமைக்கின்றனர். இதுவரை நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கவில்லை.மாவட்டத்தில் ஆண்டுதோறும் விவசாயிகளிடம் இருந்து சுமார் 23 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனை வெளி மாவட்டங்களுக்கு அனுப்புகின்றனர். அங்கு சுத்தம் செய்து, அரிசியாக மாற்றி மீண்டும் மாவட்டத்திற்கு கொண்டு வரப்படுகிறது. இங்கு நுகர்பொருள் வாணிப கழக, கோடவுன்களில் வைக்கப்பட்டு, ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் மாவட்டத்தில் அரசு சார்பில் 200 டன் கொள்ளளவு கொண்ட அரிசி ஆலை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இத்திட்டம் இப்போது வரை கானல் நீராக உள்ளது. இதை விரைந்து செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.