வைகை ஆற்றின் கரையோர கிராமத்தில் தலைவிரித்தாடும் குடிநீர் தட்டுப்பாடு துரைச்சாமிபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு.
கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு – மயிலாடும்பாறை ஒன்றியம் துரைச்சாமிபுரம் ஊராட்சி வைகை ஆற்றின் கரையோர கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு தலைவரித்தாடுவதால் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இந்த ஊராட்சிக்குட்பட்ட துரைச்சாமிபுரம், அய்யனார்புரம் கிராமங்களில் 3000 மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். மூல வைகை ஆற்றின் கரையில் உள்ள கிராமத்தில் விவசாயம், கால்நடை வளர்ப்பு மட்டுமே முக்கிய தொழிலாக உள்ளன.
இங்கு குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். துரைச்சாமிபுரம் ஊராட்சிக்கு தனி குடிநீர் திட்டம் இல்லை.
ஜங்கால்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் இந்த ஊராட்சிக்கு தண்ணீர் பிரித்து வழங்கப்படுகிறது. இது போதுமானதாக இல்லை. வைகை ஆற்றின் கரையோரத்தில் இருந்தும் கிராமத்தின் தண்ணீர் தேவை பூர்த்தியாகவில்லை.
கிராமத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது:
சுத்தம் செய்யாத மேல்நிலைத்தொட்டி
கர்ணன், துரைச்சாமிபுரம்: கிராமத்தின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யும் நடவடிக்கை ஊராட்சி நிர்வாகத்தில் இல்லை. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்து பல ஆண்டுகள் ஆகிறது. குடிநீர் தொட்டியும் சேதம் அடைந்து தூர்ந்த நிலையில் உள்ளது.
குடிநீரில் கசடுகள் கலந்து வருகிறது. இவைகளை சரி செய்யும் நடவடிக்கை இல்லை. பொதுக்கழிப்பறை பயன்பாடின்றி பல ஆண்டுகளாக மூடியுள்ளது.
அதனால் பலரும் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்துவதால் சுகாதார பாதிப்பு நிலவுகிறது. தேனியில் இருந்து துரைச்சாமிபுரத்திற்கு காலை 8:00 மணி, மதியம் ஒரு மணி மாலை 5:00, இரவு 10:00 மணிக்கு பஸ் வசதி உள்ளது.
இது போதுமானதாக இல்லை. தேனியில் இருந்து குப்பிநாயக்கன்பட்டி வரும் டவுன் பஸ்களை துரைச்சாமிபுரம் வரை நீட்டிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த ஊராட்சியின் தொடர்புகள் பெரும்பாலும் தேனியை மையமாகக் கொண்டுள்ளது. கண்டமனூர், க.விலக்கு வழியாக தேனிக்கு 10 கி.மீ., தூரம் சுற்றி செல்ல வேண்டும்.
பு கார் மீ து நடவடிக்கை இல்லை
சேகர், துரைச்சாமிபுரம்: கிராமத்தில் உள்ள 50 தெரு விளக்குகளில் தற்போது 10 மட்டுமே செயல்படுகிறது. பழுதான தெரு விளக்குகளை சரி செய்யும் நடவடிக்கை இல்லை. கிராம சபை கூட்டங்கள் தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்களைக் கொண்டு நடத்தி முடிக்கின்றனர்.
பொதுமக்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. கிராமத்தில் துப்புரவு, சுகாதாரப் பணிகள் நடக்கவில்லை. விவசாயிகளுக்கு தேவையான கதிரடிக்கும் களம், நாடக மேடை, சமுதாயக்கூட வசதிகள் கிராமத்தில் இல்லை.
கிராமப்புற நூலகம் செயல்பாடின்றி பூட்டியுள்ளது. ஊராட்சி நிர்வாகத்தில் பொதுமக்கள் தரும் புகார்களுக்கு நடவடிக்கை இல்லை.
அதிகாரிகள் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.