Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

இலவம் பஞ்சு விளைச்சல் அதிகரிப்பு விலை குறைவால் காய் பறிக்க தயக்கம்

கடமலைக்குண்டு: இலவம் பஞ்சு விளைச்சல் நடப்பு ஆண்டில் அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கான விலை கிடைக்காததால் விளைந்த காய்களை பறிப்பதற்கு விவசாயிகள் தயக்கம் காட்டுகின்றனர்.

கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருஷநாடு, முறுக்கோடை, கோம்பைத்தொழு, குமணன் தொழு, மேகமலை, அரசரடி, முத்தாலம்பாறை மலை கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் இலவ மரங்கள் உள்ளன.

ஆண்டு தோறும் பிப்ரவரி முதல் மே வரை இலவம் பஞ்சு சீசன். இப்பகுதியில் விளைந்த முற்றிய காய்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் இலவம் பஞ்சு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படும்.

வியாபாரிகள் ஏஜென்சி மூலம் மொத்தமாக கொள்முதல் செய்து தேவையான பகுதிகளுக்கு அனுப்பியும் வருகின்றனர்.

தற்போது இலவம் பஞ்சுக்கான சீசன் தொடங்கியும் விவசாயிகள் மரங்களில் இருந்து காய்கள் பறிப்பதை தவிர்த்துள்ளனர். முதிர்ந்து வெடித்த காய்களில் இருந்து பஞ்சு வெளியேறி வீணாகி வருகிறது.

விவசாயிகள் கூறியதாவது: தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு கை கொடுத்ததால் இலவ மரங்களில் அதிக அளவில் காய்கள் எடுத்துள்ளது. முற்றிய காய்கள் தற்போது பறிப்புக்கு தயார் நிலையில் உள்ளன. கடந்தாண்டு இலவம் பஞ்சு கிலோ ரூ.80 வரை விலை போனது.

தற்போது இலவம்பஞ்சு தரத்திற்கு தக்கபடி கிலோ ரூ.50 முதல் 55 வரை உள்ளது. பறிப்பு கூலி, போக்குவரத்து செலவுகளை கணக்கிட்டால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் தற்போது இலவம் பஞ்சு சேகரிப்பை தவிர்த்துள்ளனர். விவசாயிகள், வியாபாரிகள் சிலர் விலை உயரும் என்ற நம்பிக்கையில் இலவம் பஞ்சை இருப்பில் வைத்து பாதுகாத்து வருகின்றனர் என்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *