அனுப்பப்பட்டி ஊராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு
ஆண்டிபட்டி, : ஆண்டிபட்டி ஒன்றியம் அனுப்ப பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் கூட்டுக் குடிநீர் விநியோகம் பாதித்துள்ளதால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்த ஊராட்சியில் அனுப்பப்பட்டி, மேக்கிழார்பட்டி, கூத்தமேடு, ரங்கராம்பட்டி கிராமங்களில் 4000 க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். பாலக்கோம்பை கூட்டுக்குடு திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் உள்ளது. திட்டத்தின் கடைசி பகுதியில் உள்ள இப்பகுதிக்கு கூட்டுக் குடிநீர் முழுமையாக சென்று சேர்வதில்லை. ஊராட்சியில் உள்ள கிணறு, போர்வெல் மூலம் கிடைக்கும் நிலத்தடி நீரை மட்டுமே அனைத்து தேவைக்கும் பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். சிலர் குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது: பாலக்கோம்பை கூட்டுக் குடிநீர் திட்டத்தில் என்றாவது ஒரு நாள் தான் குடிநீர் விநியோகம் உள்ளது.
ஜல் ஜீவன் திட்டத்தில் இப் பகுதியில் குழாய் பதிப்புக்குப் பின் முடிந்து சோதனை ஓட்டமும் முடிந்து பல மாதங்கள் ஆகிறது. ஆனால் குடிநீர் விநியோகம் இல்லை. தற்போது கோடை துவங்கிய நிலையில் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. ஊராட்சியின் தண்ணீர் பிரச்சனையை சரி செய்வதற்கு மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.