லாரி திருடிய வழக்கில் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த டிரைவர் கைது
தேனி, மார்ச் 20: தேனியில் லாரியை திருடி விற்பனை செய்த வழக்கில் கடந்த 10 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளியை தேனி போலீசார் திண்டுக்கல்லில் கைது செய்தனர். தேனியை சேர்ந்த சீனிவாசனுக்கு சொந்தமான லாரி, கடந்த 2015ம் ஆண்டு தேனியில் திருடு போனது. இது குறித்து சீனிவாசன் அளித்த புகாரின்பேரில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை திருடியதாக மூணாறை சேர்ந்த சுந்தர் உள்ளிட்ட 7 பேரை 2015ம் ஆண்டு கைது செய்தனர்.
இவ்வழக்கில் லாரியை விற்பனை செய்ய உடந்தையாக இருந்ததாக சிவகங்கை மாவட்டம், வாகைக்குடியை சேர்ந்த ராமச்சந்திரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக போலீசிடம் பிடிபடாமல் தலைமறைவாக இருந்த ராமச்சந்திரன் திண்டுக்கல்லில் ஆட்டோ ஓட்டி வருவதாக தேனி போலீசிற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜவஹர் தலைமையிலான போலீசார் நேற்று 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ராமச்சந்திரனை கைது செய்தனர்.