நெல் கொள்முதல் நிலையம் துவக்கம் கம்பம் விவசாயிகள் மகிழ்ச்சி
கம்பம்: கம்பம் பள்ளத்தாக்கில் இரண்டாம் போக நெல் அறுவடை நடைபெற்று வரும் நிலையில், கம்பத்தில் நேற்று நெல் கொள்முதல் நிலையம் செயல்படத் துவங்கியது.
கம்பம் பள்ளத்தாக்கில் இருபோக நெல் சாகுபடி முல்லைப் பெரியாறு பாசனத்தில் மேற்கொள்ளப்படுகிறது.
பல சிரமங்களுக்கிடையே சாகுபடி செய்து அறுவடை துவங்கும் போது, நுகர்பொருள் வாணிப கழகம் உரிய நேரத்தில் நெல் கொள்முதல் செய்ய முன்வருவதில்லை.
கடந்த பிப்ரவரியில் கம்பம் ஆங்கூர் பாளையம், மஞ்சக் குளம், சாமாண்டிபுரம் போன்ற பகுதிகளில் அறுவடை துவங்கி முடிந்து விட்டது.
காமயகவுண்டன்பட்டி ரோட்டில் அறுவடை ஆரம்பமாகியுள்ளது.
தற்போது விவசாயிகளின் தொடர் வற்புறுத்தலை தொடர்ந்து நேற்று மாலை கம்பம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படத் துவங்கியது. சன்ன ரகம் கிலோ ரூ.24, 50 பைசா, மோட்டாரகம் ரூ.24.05 பைசா என அரசு நிர்ணயித்துள்ளது.
60 கிலோ எடை கொண்ட சன்ன ரகம் ரூ.1470, மோட்டா ரகம் ரூ.1443 விலை கிடைக்கிறது.
நெல் கொள்முதல் நிலையத்தில் 40 கிலோ கொண்ட மூடைகளாக மட்டுமே வாங்கப்படுகிறது.