பாதாள சாக்கடை குழாய் உடைப்பு; கழிவுநீரால் சுகாதாரக்கேடு பெரியகுளம் நகராட்சி 14வது வார்டு மக்கள் அவதி
பெரியகுளம்: குடியிருப்பு பகுதி வழியாக பாதாளச்சாக்கடை பம்பிங் ஸ்டேஷனுக்கு செல்லும் குழாய் உடைந்து கழிவுநீர் நீர் வெளியேறுவதால் சுகாதார சீர்கேட்டில் பெரியகுளம் நகராட்சி 14 வது வார்டு மக்கள் தவிக்கின்றனர்.
பெரியகுளம் நகராட்சி 14வது வார்டில் தண்டுப்பாளையம் பள்ளிவாசல் தெரு, பட்டாளம்மன் கோயில் தெரு, தோட்டி காலனி உள்ளது. இரண்டாயிரத்திற்கும் அதிக மக்கள் வசிக்கின்றனர். கூலித் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் மக்கள் தொகை அதிகமுள்ள வார்டாக இந்த வார்டு உள்ளது. பகலெல்லாம் உழைக்கும் தொழிலாளர்கள் இரவில் நிம்மதியாக உறங்க முடிவதில்லை. மக்களின் தூக்கத்தை கெடுக்கும் அளவிற்கு இந்த வார்டில் கொசு தொல்லையும், சுகாதார கேடு மோசமாக உள்ளது. சில பகுதிகளுக்கு
பாதாளச்சாக்கடை இணைப்பு வழங்காததால் தெருவெங்கும் சாக்கடையில் கழிவுநீர்தேங்கியுள்ளது. வார்டு பொதுமக்கள் கூறியதாவது:
சுகாதார சீர்கேடு
முத்துலட்சுமி, பெரியகுளம்: தோட்டி காலனி பின்புறம் சாக்கடை கட்டாததால் கழிவுநீர் தேங்கியுள்ளது. சாக்கடையை சுத்தம் செய்வதற்கு யாரும் வருவதில்லை. இதில் உருவாகும் வால் புழுக்கள் வீட்டிற்குள் செல்கிறது. சுகாதார சீர்கேட்டினால் அடிக்கடி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் பாதிப்புக்குள்ளாகின்றனர். 2001ல் கட்டப்பட்ட பெண்கள் சுகாதார வளாகம் பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்துள்ளது. இதனை இடித்து விட்டு புதிய பெண்கள் சுகாதார வளாகம் கட்டித்தர வேண்டும். தெருவில் சேதமடைந்த பேவர் பிளாக் கற்களை சீரமைத்து தர வேண்டும்.
வெளியேறும் கழிவுநீர் நீர்
முத்துராஜ், பெரியகுளம்: தென்கரை பகுதியில் பாதாளச்சாக்கடை கழிவுநீர் நீர் குழாய் தோட்டிகாலனி பின்புறம் வராகநதியின் குறுக்கே சென்று சுடுகாட்டில் உள்ள பாதாளச்சாக்கடை பம்பிங் ஸ்டேஷனுக்கு செல்கிறது. சிலமாதங்களுக்கு முன்பு வராகநதியில் வெள்ளப்பெருக்கில் குழாய் உடைந்தது. இதனால் தோட்டிகாலனி
பின்புறம் குடியிருப்பு பகுதி அருகே பாதாளச்சாக்கடை கழிவுநீர் பீய்ச்சி அடித்தது. கழிவுநீர் நாற்றத்தால் வீட்டில் நிம்மதியாக சாப்பிட முடியவில்லை. நகராட்சி நிர்வாகம் குழாயை சீரமைக்க வேண்டும்.
வெள்ளத்தடுப்பு சுவர் இல்லை
கள்ளிச்சி, பெரியகுளம்: மழை காலங்களில் வராகநதியில் வெள்ளம் நீர் குடியிருப்பு பகுதியில் வருகிறது. இதனால் வீடுகளுக்குள் சாக்கடை கலந்து மழை நீரினால் சிரமப்படுகிறோம். இந்தப்பகுதியில் வெள்ளத்தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும். பாதாள சாக்கடை இணைப்பு வழங்காததால் சுகாதார சீர்கேட்டில் தவிக்கிறோம்.
நகராட்சி நிர்வாகம் நாங்கள் படும் வேதனையை பார்த்து, சிறப்பு நிதி ஒதுக்கி தங்கு தடையின்றி கழிவுநீர் செல்வதற்கு சாக்கடை வசதி செய்து தர வேண்டும்.