Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

பிரதமரின் கவுரவநிதி திட்ட பயனாளிகள் அடையாள எண் பெற அழைப்பு

பெரியகுளம்: பிரதமரின் கவுரவ நிதி திட்ட பயனாளிகள் 2444 பேர் அடையாள எண் முகாமில் பதியாமல் உள்ளனர் என வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்தார்.

பெரியகுளம் வேளாண்உதவி இயக்குனர் மணிகண்ட பிரசன்னா கூறியதாவது: பெரியகுளம் வட்டாரத்தில் அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு அடையாள எண் வழங்குவதற்கு வடுகபட்டி வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் பெரியகுளம் வட்டாரத்தில் அனைத்து வருவாய் கிராமங்களிலும் சிறப்பு முகாம் நடந்து வருகிறது. மார்ச் 31 வரை நடக்க உள்ளது. இல்லம்தேடி கல்வி, சமுதாய வள தன்னார்வலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் விவசாயிகளிடம் ஆதார், தொடர்பு எண் மற்றும் நில விபரங்கள் குறித்து தரவுகள் சேகரிக்கப்பட்டு, ஆதார் எண் போன்று விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட உள்ளது. வரும் காலங்களில் அனைத்து நலத்திட்ட உதவிகளும் இந்த தரவு அடிப்படையில் வழங்கப்படும். நில விபரங்களை இணைப்பதன் மூலம் அனைத்து துறை நலத்திட்டங்களை எளிதில் பெறலாம். ஒவ்வொரு முறையும் விண்ணப்பிக்கும் போது ஆவணங்களை சரிபார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

அரசு திட்டங்கள் சரியான பயனாளிகளுக்கு செல்வது உறுதிபடுத்த முடியும். பெரியகுளம் வட்டாரத்தில் பிரதமரின் கவுரவ நிதி திட்ட பயனாளிகள் 5161 பேரில், 2717 பேர் மட்டும் பதிவு செய்துள்ளனர். அரசு திட்டங்களில் தொடர்ந்து பயன்பெற முகாமில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு அந்தந்த வேளாண் விரிவாக்க அலுவலரை அணுகலாம் என தெரிவித்தார்.-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *