குழந்தைகளின் உளவியலை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும் பேச்சாளர் கோபிநாத் அறிவுரை
தேனி : இன்றைய தலைமுறை மாணவர்களின் உளவியலை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும் என தன்னம்பிக்கை பேச்சாளர் கோபிநாத் பேசினார்
தேனியில் உள்ள இனவேஷன் பப்ளிக் பள்ளி குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா, ஆண்டு விழா நடந்தது. விழாவிற்கு தன்னம்பிக்கை பேச்சாளர் கோபிநாத் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் நாராயணபிரபு முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு பட்டம், சான்றிதழ்கள் வழங்கி கோபிநாத் பேசுகையில், ‘இன்று பெற்றோர்கள் குழந்தைகளிடம் நாங்கள் உன் வயதில் என்ன செய்தோம் தெரியுமா என ஒப்பிடுகின்றனர் இது தவறு. இன்றைய குழந்தைகள் டிஜிட்டல் யுகத்தினர். இவர்கள் எதையும் பயமின்றி துணிச்சலாக செய்ய கூடியவர்கள். இது தான் பெற்றோருக்கும் இவர்களுக்கும் உள்ள இடைவெளி.
பெற்றோர்கள் படிப்படியாக கற்றுக் கொண்டதை குழந்தைகள் விரைவாக கற்றுக்கொள்கின்றனர். ஒரே நேரத்தில் பல பணிகளை திறம்பட செய்கின்றனர். குழந்தைகளின் உளவியலை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும்.
அவர்கள் எதையும் சுருக்கமாக பேசி தெரிந்து கொள்ள விரும்புகின்றனர்’, என்றார்.
விழாவில் அரிமா சங்க நிர்வாகிகள் செல்வகணேஷ், தங்கராஜ், பாலாஜி, பிரகாஷ், ஜெகன், சரவணராஜா, சரவணன், தங்கப்பாண்டி, ராதாகிருஷ்ணன், வழக்கறிஞர் கண்ணன், அஜய்துர்கேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.