ரயில்வே மேம்பால பணி நடைபெறும் பகுதி இருளால் மக்கள் தவிப்பு தொடரும் விபத்துக்கள்
தேனி : தேனியில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெறும் பகுதியில் இரவில் வெளிச்சமின்றி இருள்சூழ்ந்து காணப்படுவதால் விபத்துக்கள் தொடர்கிறது.
தேனி, மதுரை ரோட்டில் பென்னிகுவிக்நகர் சந்திப்பில் இருந்து சிப்காட் அருகே உள்ள தனியார் பள்ளி வரை ரயில்வே மேம்பால பணிகள் நடக்கிறது. இப்பணியை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். மேம்பால பணி நடைபெறும் பகுதியில் அரண்மனைப்புதுார் விலக்கு, சிப்காட் முதல் தனியார்பள்ளி வரை மின் விளக்குகள் இல்லை
இப்பகுதியில் அரசு, தனியார் பஸ்கள் அதிவேகத்தில் இயக்கப்படுகின்றன. இரவில் வெளிச்சம் இன்றி, அதிக அளவு துாசி பறக்கிறது. ரோட்டோரங்களில் மணல் குவிந்துள்ளன.இப் பகுதியில் விளக்கு வசதி இல்லாததால் மூன்று நாட்களுக்கு முன் நடந்த விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர்.
இரவில் இப்பகுதியில் மின் விளக்கு வசதி செய்திடவும், துாசி பறப்பதை தவிர்க்கவும் தினமும் இருமுறை தண்ணீர் தெளிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர்பகுதிக்குள் வாகனங்கள் வேகத்தை குறைத்து இயக்க டிராபிக் போலீசார் டிரைவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.